ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கும் சைக்கிள்: விழுப்புரம் இளைஞரின் கண்டுபிடிப்பு

ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. பயணிக்கும் வகையில் மின்சார சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாற்றாக ரூ.20 ஆயிரம் செலவில் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வடிவமைத்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.பாஸ்கரன் (33). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் படித்து முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். கரோனா ஊரடங்கினால் வேலையின்றி வீட்டில் இருந்து விவசாயம் செய்து வருகிறார்.

வாழும் காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் அந்த ஆர்வத்தின் அடிப்படையில் விவசாய பணிக்கு மத்தியில் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, அதற்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டார்.

இதற்காக அவர், காயலான் கடைக்கு சென்று அங்கிருந்த பழைய சைக்கிள் ஒன்றை ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர், பிரேக் கட் ஆபர் என ரூ.18 ஆயிரம் செலவிலான கருவிகளை பொருத்தி மின்சாரத்தில் இயங்கும்படி சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது:

” இந்த மின்சார சைக்கிளில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் போடுவதற்கு ஒரு யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்த ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. சைக்கிளின் பெடல்களை மிதித்து தொடர்ந்து இயக்கலாம், எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற கூடுதல் திறன்மிக்க மின்சாரத்தில் இயங்கும் சைக்கிகளை உருவாக்க முடியும்.
நான் நல்ல நிலையை அடைந்தால் வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து அதன் மூலம் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறைந்தது 5 பேருக்காவது மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர மிதிவண்டியை செய்து அவர்களுக்கு இலவசமாக வழங்குவதே தனது லட்சியம்

இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.