கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

நாகை: தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை சட்டம் 1983ன் படி தடை செய்யப்பட்டுள்ள அனைத்து விதமான (கடல்தொழில்) வலை மற்றும் படகு தொழில்கள் போன்றவற்றின் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களை கண்டித்தும் நேற்று (17ம் தேதி) நம்பியார் நகரில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரியநாட்டுதெரு கிராம மீனவர்களும் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்களும், மீனவ பெண்களும் கலந்து கொண்டனர். இதனால் நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.  பூம்புகாரில் போராட்டம்: சீர்காழி அருகே பூம்புகார் மீனவ கிராமத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக் வேண்டும். தமிழ்நாடு மீன் பிடி ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 1983ஐ அமல்படுத்த வேண்டியும் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விசைப்படகுகள், பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திலும் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர். கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மடவாமேடு கிராமத்தில் மடவாமேடு, கொட்டாய்மேடு, வெள்ளைமணல், தற்காஸ் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆண் மற்றும் பெண் தனித் தனியாக அமர்ந்து மடவாமேடு கிராம தலைவர் கலியமூர்த்தி தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.