சபரிமலையில் இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம், 
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கோடிக் கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்துச் செல்வர். கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஆடி மாதப் பிறப்பையொட்டி, நேற்று முதல் வரும் 21ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாள்களும் கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் அல்லது கோயில் வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, ஆா்.டி.பி.சி.ஆா்., கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் பக்தர்கள், sabarimalaonline.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.