சோலையில் எங்கெங்கும் பூவாசம்! பின்னலாடை துறை வேகமெடுக்கிறது

திருப்பூர்;கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. நிட்டிங் துவங்கி பேக்கிங் வரையிலான உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் சுறுசுறுப்பாகியுள்ளன.
உள்நாட்டு ஆடை உற்பத்தி

தேவை அதிகரிப்பால், உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் அதிகரித்துள்ளன. குளிர் கால ஆடை தயாரிப்பு நடக்கிறது. தீபாவளி நெருங்குவதால், மேலும் அதிக ஆர்டர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. பருத்தி, பஞ்சு விலை உச்சத்தை எட்டியுள்ளது, ஆடை உற்பத்தியாளரை கவலை அடையச் செய்துள்ளது. நுாற்பாலைகள், நுால் விலையை சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆடை உற்பத்தியாளர்கள்.

ஏற்றுமதி ஆடை உற்பத்தி
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. 80 சதவீத இயக்க நிலையை எட்டியுள்ளது. ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகையை, வரும் 2024 மார்ச் வரை நீட்டித்து, மத்திய அரசு கைகொடுத்துள்ளது. சீன பருத்திக்கான தடையை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இவையெல்லாம், பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகம்.அவசர கால கடன் திட்டத்தில், கூடுதல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிடவேண்டும்.

நிட்டிங்பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான துணி ரகங்களை தயாரித்துக்கொடுக்கிறது நிட்டிங் துறை. இறக்குமதி மற்றும் உள்நாட்டு இயந்திரங்கள் மூலம், துணி தயாரிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு பின், நிட்டிங் நிறுவனங்கள் 85 சதவீத உற்பத்தியை அடைந்துள்ளன. இதனால், துணி உற்பத்தி அதிகரித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்த மெஷின்களுக்கு, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்ட சலுகைகளை தாமதமின்றி விடுவிக்கவேண்டும் என்பது, இத்துறையினரின் எதிர்பார்ப்பு.
சாய ஆலை
திருப்பூர் பகுதி சாய ஆலைகள் இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்துவருகின்றன. இத்துறை சார்ந்த தொழிலாளர் அதிகளவில் பணிக்கு திரும்பியுள்ளனர்.தமிழக அரசு, சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு வழங்கிய 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை, மானியமாக அறிவிக்கவேண்டும். பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, ஐந்து சதவீதமாக குறைக்கவேண்டும் என்பது, சாய ஆலை துறையினரின் எதிர்பார்ப்பு.

எலாஸ்டிக் உற்பத்தி
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இரண்டு மாதத்துக்கு தேவையான எலாஸ்டிக், இந்நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது. உள்நாட்டில் விலை அதிகாரிப்பால், எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, மலேசியாவிலிருந்து 40 டன் ரப்பர் இறக்குமதி செய்துள்ளன. இதன் மூலம், எலாஸ்டிக் தயாரித்து வருகின்றனர். ஆடை உற்பத்தி துறையின் இயக்கத்தை பொருத்து, எலாஸ்டிக் தயாரிப்பை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
காஜா பட்டன்
காஜா பட்டன் நிறுவனங்கள் ‘பிசி’யாகிவிட்டன. மூன்றாவது அலை பயத்தால், இத்துறை சார்ந்த தொழிலாளர் மீண்டும் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது. 60 சதவீத தொழிலாளர் வந்துள்ளனர்.கடந்த ஏப்., 1ம் தேதி முதல், காஜாபட்டன் கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டண உயர்வு வழங்கி, தங்களுக்கு கைகொடுக்கவேண்டும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பு
செக்கிங் – அயர்னிங்
பின்னலாடை உற்பத்தியின் கடைசி நிலையான செக்கிங், அயர்னிங், பேக்கிங்கில், குறு, சிறு நிறுவனங்களே அதிகம் உள்ளன.உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்காக, ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களுக்கான கட்டணத்தில், ஐந்து சதவீதம் வரை குறைப்பதாக, இத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.வங்கி கடன், கட்டட வாடகை கழுத்தை நெரிப்பதால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், செக்கிங், அயர்னிங், பேக்கிங் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்கவேண்டும், என்கின்றனர், இத்துறையினர்.
கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி
திருப்பூரில், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி நிறுவனங்கள் இன்னும் வேகமெடுக்கவில்லை. மொத்த திறனில், 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. தொழிலாளர் வருகை அதிகரித்தால், உற்பத்தி வேகமாகும். பிரின்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் தற்போது வேகமெடுத்துள்ளன.”மத்திய அரசு, இ.எஸ்.ஐ., மூலம், தொழிலாளருக்கு இலவச தடுப்பூசி செலுத்துதல், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைத்தல், தொழிலாளருக்கான குடியிருப்பு வசதி ஏற்படுத்துதல்” போன்றவை என்பது தொழில்துறையின் ஒட்டுமொத்த கோரிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.