பலியான உயிர்கள்., போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.! தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் துறைமுகத்திற்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் ஆனி, ஆடி மாதங்களில் எழும் இராட்சத அலையில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் பலியாவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆன்றணி, ஷிபு என்ற இரண்டு மீனவர்கள் கரை திரும்பியபோது துறைமுக இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தனர். தற்போது இனயம்புத்தன்துறையைச் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி அன்புத் தம்பி ஆன்றணி பிரிட்டின் அவர்கள் நேற்று (17-07-2021) மீன்பிடித்துத் திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்குண்டு பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி குடும்பத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கடல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீனவர்களையும் படகுக

ளையும் பாதுகாப்பதற்காக மீனவர்களின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் சரியான வடிவமைப்பில்லாமலும் ஆய்வு செய்யப்படாமலும் கட்டப்பட்ட காரணத்தால், துறைமுகத்தின் உள்ளேயே இராட்சத அலைகள் உருவாகி மீனவர்களுக்கும், அவர்களுடைய படகுகளுக்கும் பெரும் பாதிப்பைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதை அரசு கண்டும் காணாமல் இருக்கும் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மேலும் மீன்பிடி துறைமுகத்தின் மிக அருகிலேயே புதிதாக ஒரு தடுப்பணையைக் கட்டுவதால் ஆற்றுநீர் கடலுடன் கலப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் அலைகளால் கொண்டுவரப்படும் மணல்கள் சேர்ந்து மண்மேடு உருவாகிறது. மீனவர்களின் படகுகள் இந்த மண்மேடுகளில் மோதி விபத்துகள் நடப்பதும் தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பாராத விபத்துகளினால் பேராபத்துகளினால் ஆண்டுக்கு 4 முதல் 10 மீனவர்கள் வரை இத்தகைய துறைமுக விபத்துகளில் சிக்கிப் பலி ஆகிறார்கள் என்பதை துறைசார் அரசு நிர்வாகம் கவனிக்க தவறியது ஏனோ?

இவ்வாறாகச் சரியான திட்டமிடாமல் அமைந்த துறைமுகக் கட்டுமானத்தாலும், புதிதாகக் கட்டப்படும் தடுப்பணையாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல இயற்கை பேரிடர்களினாலும், சிங்கள பேரினவாதத்தாலும் தங்கள் வாழ்வில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மீனவச் சொந்தங்கள் இதுபோன்ற துறைசார் சீர்கேடுகளினாலும் விபத்துகளில் சிக்குண்டு மேலும் இன்னலுக்கு ஆளாகி உயிரிழப்புகளுக்கும் பொருளிழப்புகளுக்கும் உள்ளாதைத் தடுக்க தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து ஒழுங்கற்று அமைந்துள்ள துறைமுகங்களைச் சீர்படுத்த முன்வரவேண்டும். மேலும் மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தினை ஆழப்படுத்திப் பாரம்பரிய மீனவர்களின் அனுபவ அறிவின் துணைகொண்டும், கடல்சார் அறிவியல் வல்லுநர்களின் துணைகொண்டும் துறைமுகத்தின் தரத்தினை முறையாக மேம்படுத்திட வேண்டும்.

முறையாக வடிவமைக்கப்படாத இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் படகு விபத்துக்குள்ளாகி மரணமடைந்த தம்பி ஆன்றணி பிரிட்டின் குடும்பத்திற்கு முறையான இழப்பீட்டினை காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு, இனியும் மீனவர்கள் பலியாவதைத் தடுக்க, போர்க்கால அடிப்படையில் மீன்பிடித் துறைமுகத்தை முறையாக வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.