மகளிர் இலவச பயணச்சீட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்து மோசடி: நடத்துனர் சஸ்பெண்ட்

சேலத்தில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை வடமாநில பயணிகளுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த நடத்துனரிடம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் வடமாநிலத்தை சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கொடுத்து கட்டணம் வசூலித்தார் அந்த அரசு பேருந்தின் நடத்துனர் நவீன் குமார்.
அரசு பேருந்து ஐந்து ரோடு அருகே வந்த போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மற்ற பயணிகளை பேருந்தில் இருந்து இறங்கி மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைத்த அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் நவீன் குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண் பயணிகளுக்கு கொடுத்து முறைகேடாக கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரசு பேருந்து நடத்துனர் நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.