மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: 17 புதிய மசோதாக்கள் அறிமுகம்; கரோனா, பெட்ரோல் விலை உயர்வை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 17 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு கரோனா 2-வது அலையைக் கையாண்டவிதம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை கிளப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் நாளை(19-ம்தேதி) தொடங்குகிறது.இந்தக் கூட்டத் தொடரில் 20அமர்வுகளை ஆகஸ்ட் 13-ம் தேதிவரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 17 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதில் 3 மசோதாக்கள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுகின்றன. கூட்டத்தொடர் தொடங்கிவிட்டால் 6 வாரங்களுக்குள் அவசரச்சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிட்டால் அது கலாவதியாகிவிடும்.

குறிப்பாக அத்தியாவசிய பாதுகாப்புசேவைகளுக்கு எதிராக போராடத் தடைக்கான அவசரச்சட்டம், தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்றுதர மேலாண்மை அமைப்பு அமைக்கும் அவசரச்சட்டத்துக்கு மசோதாவை நிறைவேற்றுதலாகும்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசைச் சமாளிப்பது பெரிய சிக்கலாக இருப்பதால், அதை கையாள்வதற்கும், நிரந்தர தீர்வு காணும் வகையில் சுயஅதிகாரம் கொண்ட, கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பை உருவாக்க சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

ஆனால், மத்திய அரசைக் கட்டம் கட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக கரோனா 2-வது அலையை சமாளிக்க மத்திய அரசு தோல்வி அடைந்தது, நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலவுவது ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் விவாதிக்ககூடும்.

பெட்ரோல், டீசல் , சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை பற்றியும் எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து, நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புக்கூடும் எனத் தெரிகிறது.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத்தலவைருமான வெங்கய்ய நாயுடு நேற்று எம்.பி.க்களிடம் கூறுகையில் “ கரோனா பெருந்தொற்று காலத்தில், எம்.பி.க்கள் மக்களுக்கு ஆதரவாகஇருந்து,மக்களின் நலன் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க வேண்டும். கூட்டத்தொடரை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் கொண்டு செல்ல எம்.பி.க்கள் முயல வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

கரோனா2-வது அலை படிப்படியாகக் குறைந்துவருவதால், கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.