மாவட்டத்தில் நிரம்பி வரும் நீர்நிலைகள்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்கிறது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளதால், வாய்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 183 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 39.50 அடி நிரம்பியுள்ளது. தொடர் மழையால் வீராணம் ஏரிக்கு வரத்து வாய்க்கால்கள் மூலம் வினாடிக்கு 323 கனஅடி தண்ணீர் வருகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வெள்ளாறு, ராஜன் வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. 5.50 அடி கொள்ளளவு உடைய வாலாஜா ஏரி நிரம்பியது. இதனால் ஏரிக்கு வரும் 105 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. தவிர விவசாய பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் வாலாஜா ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.6.50 கனஅடி கொள்ளளவு கொண்ட பெருமாள் ஏரியில் தற்போது 2.60 கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் 65 கனஅடி தண்ணீர் விவசாய பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. 29.72 அடி உள்ள வெலிங்டன் ஏரியின் மொத்த கொள்ளளவு 2,580 மில்லியன் கன அடி. இதில், 11 அடி நிரம்பி, 289.90 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் கொள்ளிடம் வடிநிலக்கோட்டத்தில், விருத்தாசலம் வெள்ளாறு வடி நிலக் கோட்டத்தில் மொத்தம் 228 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் ஒரு ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. 4 நீர்நிலைகள் 91- 99 சதவீதமும், 6 நீர்நிலைகள் 81-80, 13 நீர்நிலைகள் 51-70, 16 நீர்நிலைகள் 26-50, 67 நீர்நிலைகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.