மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாறிய வரலாறு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அண்ணா!

ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு 1950-ல் இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதி மெட்ராஸ் மாநிலமாக தொடர்ந்தது. 
இது தமிழ் மொழி மீதும், தமிழ் பேசும் மக்கள் மீது பற்றுக் கொண்ட நல் உள்ளங்களை கொண்டவர்களின் நெஞ்சை வாட்டியது. அப்போதிலிருந்தே பெயர் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுந்தது. 
image
குறிப்பாக விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் கோரி 1956-ல் சாகும் வரை உண்ணா நோன்பை கடைபிடித்துள்ளார். அப்போது அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். அதில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, தியாகி சங்கரலிங்கனாரை சந்தித்துள்ளார். அந்த கோரிக்கைக்காக சங்கரலிங்கனார் உயிர் நீத்தார்.   
பின்னர் பலமுறை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்து குரல்கள் எழுப்பட்டுள்ளன. இறுதியில் 1967-ல் அண்ணா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த அரசியல் சட்டத் திருத்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஜூலை 18, 1967 அன்று கொண்டு வந்துள்ளார். 
“இது நிறைவேற்றப்பட்டால் அது தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி” என அப்போது சொல்லி முதல்வர் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு ஏகமனதாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர். 
image
image
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அப்போதைய அவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தவுடன் முதல்வர் அண்ணா, ‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’ என மூன்று முறை அறிவிக்க, அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க’ என சொல்லியுள்ளனர். 
பிறகு 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்ற பெயர் முறைப்படி மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.