“₹1200 கோடி இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்!" – போராட்டத்தில் விவசாயிகள்

கடந்த குறுவை, சம்பா, தாளடி பட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், பெரு மழையால் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. ஆனால் இதற்கான பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டுத்தொகை இதுவரையிலும் வழங்கப்படாமலே உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழுத்தாக்குதலால், சோளமும் பாதிக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்படவில்லை. இந்த இழப்பீட்டுத்தொகையை, காலதாமதத்திற்கான வட்டிடன் சேர்த்து உடனடியாக வழங்கக்கோரி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சோளப்பயிர்களை கைகளில் ஏந்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சோளப்பயிர்களுடன் போராட்டம்

Also Read: தமிழகத்தின் முதல் விவசாய பட்ஜெட்: ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

இதுகுறித்து நம்மிடம் பேசிய இச்சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், “சென்ற ஆண்டு குறுவை நெற்பயிருக்கு உரிய பயிர் இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் தொகையை கடந்த ஜுலை மாதம் விவசாயிகள் செலுத்தினார்கள். சென்ற ஆண்டு சம்பா, தாளடிக்கு, டிசம்பர் 15-ம் தேதிக்குள்ளாகவும், மக்காச்சோளத்திற்கு, அக்டோபர் மாதத்திற்குள்ளாகவும் விவசாயிகள் ப்ரீமியம் தொகையை செலுத்தினார்கள். வேளாண்மைத்துறை மற்றும் பயிர் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் ப்ரீமியம் தொகையை வாங்கக் காட்டிய வேகத்தையும் அவசரத்தையும், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் காட்டவில்லை, இது விவசாயிகளை வேதனை கொள்ளச் செய்கிறது. கடந்த ஆண்டு குறுவை, சம்பா, தாளடி பட்டத்தில் பருவம் தவறிப் பெய்த வரலாறு காணாத பெருமழையால், நெல் விளைச்சலில் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டது.

இதனால் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை தமிழகம் முழுவதும் பெருமழை பாதிப்பு என அறிவித்து, ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்தது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அந்த இழப்பீட்டுத் தொகை இதுவரையில் வழங்கப்படாமலே உள்ளது. சென்ற ஆண்டு சுமார் 8.16 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் செலுத்தியிருந்தார்கள். பெருமழையால் பாதிக்கப்பட்ட மகசூல் அளவினை, பயிர் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர்கள், வேளாண்மைத்துறையினர், புள்ளியல் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அறிவித்துவிட்டார்கள். நான்கு மாதங்களுக்கு மேலாகியும் கூட, இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. `மகசூல் இழப்பு மதிப்பீட்டு அலுவலர்கள், மதிப்பீட்டு கணக்குப் பணிகளை முடித்தவுடன் அதிகபட்சம் அடுத்த 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்து விவசாயிகளுக்கு தகவல் சொல்ல வேண்டும்’ என பிரதமர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது.

சுவாமிமலை விமல்நாதன்

தமிழகம் முழுவதும் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு, இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டிய மொத்த இழப்பீட்டுத்தொகை, ரூ.1200 கோடி ஆகும். இதனை வழங்காமல் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. `30 நாள்களுக்குள் பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால், காலதாமத்திற்கு உரிய வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும்’ என அரசின் விதிமுறையில் உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. இனியும் அந்த நிலை நீடிக்கக் கூடாது. காலதாமதத்திற்கு உரிய வட்டியுடன் இழப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என வலியுறுத்தினார். இயற்கை இடர்பாடுகளால், மகசூல் இழப்பு ஏற்பட்டு, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், ஓரளவுக்காவது இன்ஷுரன்ஸ் இழப்பீட்டுத் தொகை கைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் ப்ரீமியம் தொகையைச் செலுத்துகிறார்கள். ஆனால் இது உரிய காலத்திற்குள், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காமல் போவது இவர்களை மிகுந்த மன வேதனையிலும் ஆதங்கத்திலும் ஆழ்த்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.