"இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை…"- வெள்ளித்திரையில் பக்தி வளர்த்த கலைஞர்கள் – 3 | கே.வி.மகாதேவன்

கயிலாயமா, வைகுந்தமா… இன்றும் நினைத்துக் கொண்டால் இவர் இசையே நினைவுக்கு வரும். வெள்ளித் திரையில் பக்தி படங்கள் வெளியான போதெல்லாம் இவரின் இசையே அதை வெற்றி பெற வைக்கும். மகாதேவன் இசை என்றால் அந்த படம் நிச்சயம் வெற்றிதான் என்ற பெரும் புகழை அடைந்தவர் இவர் ஒருவரே. ‘ஒருநாள் போதுமா…’ என்பது இவர் பாடலின் வரி மட்டுமல்ல இவர் பக்தியின் புகழ் பாடவும் இவரது திரையிசை சாதனைகளைப் பேசவும் பொருத்தமானது. தேவாரப் பதிகம், திவ்ய பிரபந்தம், மேடைகளில் ஒலித்த கீர்த்தனைகள் யாவும் இவரது இசையில் இன்னும் மெருகு கொண்டது. எளிய மக்களையும் சென்று அடைந்தது. நெற்றி நிறைய விபூதி, அதில் ஜொலிக்கும் செந்நிற குங்குமப் பொட்டு என இவர் இருக்கும் இடமே பக்தியால் நிறைந்துவிடும்.

திருவிளையாடல்

கே.வி. மகாதேவன், நாகர்கோவில் அருகில் உள்ள கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், லட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாக 1918 மார்ச் 14 அன்று பிறந்தவர் கே.வி.மகாதேவன். பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்ற இவர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார். பிறகு அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார். பிறகே திரை இசைத்துறைக்கு வந்தார்; சாதித்தார். அந்தச் சாதனை உடனடியாக நிகழ்ந்து விடவில்லை.

1942-ல் மனோன்மணி என்ற படத்தில் துணை இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் பெரிய வாய்ப்புகள் ஏதுமின்றித் தவித்தார். பின்பு 1954 ம் ஆண்டு புதிய வாய்ப்புகள் உண்டாது. அதுமுதல் அவரின் சாதனைப் பயணமும் நீண்டது. அது 1990 -ம் ஆண்டு ‘முருகனே சரணம்’ என்ற படத்துடன் நிறைவு பெற்றது. இதற்கிடையில் இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 1,500. இந்தச் சாதனையை இனி எவராலும் எந்த காலத்திலும் தொட முடியாது. 50 ஆண்டு காலம் இசை அமைத்தாலும் காலத்துக்கு ஏற்ற புதுப் பொலிவை கொண்டது இவர் இசை.

சங்கராபரணம்

சுமார் அரை நூறாண்டுகள் இசை உலகின் சிம்மமாகத் திகழ்ந்தவர் கேவிஎம் அவர்கள். இவரை சினிமா உலகில் மாமா என்றே சகலரும் மரியாதையோடு அழைப்பார்கள். காரணம் அந்தக் காலத்தில் மாமா மாமா மாமா என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. அதற்கு இசையமைத்தவர் இவர் என்பதால் அவ்வாறு அடையாளப்படுத்திப் பிற்காலத்தில் அன்பிற்குரிய உறவாகவே அனைவரும் கருதும் அளவுக்கு நெருக்கமானார். இவரால் கிராமிய இசை கர்நாடக இசையின் தன்மையோடு சினிமாவுக்குள் நுழைந்து பெரும்வரவேற்பைப் பெற்றது. இதற்கு உதாரணம், ‘ஏரிக்கரையின்மேலே போறவளே பெண்மயிலே…’ பாடல். இவரது எல்லா பாடல்களுமே ஒரு ராக தாள ஒழுங்குக்குள் அமைந்து இன்றும் காலம் கடந்து நின்று வருகிறது.

இப்படிப்பட்ட மாமேதைக்கு 1967-ம் ஆண்டு முதல் விருது கிடைத்தது. அதன்பின் சங்கராபரணம் படத்துக்காகவும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இவரின் இசைப் பயணத்தில் அதிகமாக இடம் பிடித்தது பக்தி படங்களே.

கே.வி.மகாதேவன்

சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்ச்செல்வர், சரஸ்வதி சபதம் என தமிழிலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என திராவிட மொழிகள் நான்கிலும் பக்தி மணம் கமழ இசை ராஜ்ஜியமே நடத்தியவர். இப்படிப்பட்ட மாமேதையின் இசைப்பயணம் குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.