கரோனா காலத்தில் விலங்குகளுக்கு உணவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜருக்கு பிரதமர் பாராட்டு

கரோனா காலக்கட்டத்தில் தெருவில் ஆதரவற்று இருந்த விலங்குகளுக்கு உணவு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிய ஓய்வுபெற்ற ராணுவ மேஜருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமிளா சிங். ஓய்வுபெற்ற ராணுவ மேஜர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, ஏழை, எளிய மக்களுக்கு உணவு, மருந்துகளை வழங்கி வந்திருக்கிறார் பிரமிளா. அப்போதுதான், தெருக்களில் சுற்றித்திரியும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் உணவு வழங்க தற்போது யாரும் இல்லை என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

அன்றில் இருந்து, தெரு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு வழங்கியும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவற்றுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறார் பிரமிளா.

மேஜர் பிரமிளாவின் இந்த சேவை, பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது சேவை மனப்பான்மையை பாராட்டும் விதமாக பிரமிளா சிங்குக்கு மோடி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்வேகம் அளிக்கும்

விலங்குகளின் வலியையும், அவற்றின் தேவையையும் உணர்ந்ததற்காகவே முதலில் உங்களைபாராட்ட வேண்டும். ஆதரவற்றநிலையில் இருந்த நூற்றுக்கணக்கான விலங்குகளுக்கு நீங்கள் உணவும், சிகிச்சையும் வழங்கி வருகிறீர்கள்.

இதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே இந்த சேவையை செய்கிறீர்கள். உங்களைப் போன்றமனிதர்களால்தான், மனிதநேயத்தின் மாண்பை உணர்ந்து பெருமை கொள்ள முடிகிறது. உங்களின் பணியானது, கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் சேவைப் பணி தொடர எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.