குடியரசு தலைவருடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு: நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க திட்டம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த ஜூன் 17-ம் தேதி டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். மறுநாள் 18-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகரகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். முதல்வருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். நேற்றிரவு முதல்வர் டெல்லியில் தங்கினார்.

இன்று பகல் 12.15 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஸ்டாலின் சந்திக்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவரை ஸ்டாலின் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து தமிழகஅரசு உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழக நலன் சார்ந்த பல்வேறுமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது. எனவே, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்’’ என்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகம்மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும், தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசுவழங்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைக்க இருப்பதாக தமிழக அரசு அதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தனர்.

வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாளில் அவரது படத் திறப்பு விழா சென்னையில் நடக்க உள்ளது.அதில் பங்கேற்று கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை முதல்வர் ஸ்டாலின் அழைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.