குவிகிறது! குடும்பத் தலைவி பெயரில் ரேஷன் கார்டு விண்ணப்பம்…….ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனால் மாவட்டம் வாரியாக குடும்பத் தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டு அரசு மற்றும் தனியார் இ- சேவை மையங்களில் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். ஏற்கனவே ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டு விண்ணப்பங்களும் குவிகிறது. கடலுார் மாவட்டதில் 1,420 ரேஷன் கடைகள் உள்ளன. 7 லட்சத்து 49 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் குடும்பத் தலைவியின் புகைப்படத்துடன் புதிய ரேஷன் கார்டு கேட்டும், ஏற்கனவே கார்டில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டும் விண்ணப்பங்கள் குவிகின்றன.வட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட கார்டு பயன்படுத்துவோர் சிலவற்றில் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவியின் புகைப்படம் மாறியிருக்கும்.

இந்த வகை கார்டுகளில் குடும்பத் தலைவர்களுக்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து மாற்றித் தரப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எந்த வகை கார்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டு கூறாத நிலையில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படம் இடம் பெற கேட்டு விண்ணப்பங்கள் அதிகளவில் வருகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.