தடுப்பூசிகளை வாங்குவதில் உலக நாடுகள் போட்டாபோட்டி பணக்கார, ஏழை நாடுகள் இடையே ஏற்றத்தாழ்வு

பாரீஸ், 
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான ஒரே வலிமையான ஆயுதம் தடுப்பூசிதான் என்பதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது. தடுப்பூசி போட்டால்தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலை உள்ளது.
இதனால் உலக நாடுகள் பலவும் தத்தமது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கொள்முதலில் இறங்கி உள்ளன. இதில் நாடுகள் இடையே போட்டி நிலவுகின்றன.

மிக வேதனையான அம்சம், பணக்கார நாடுகள் முந்துகின்றன. ஏழை நாடுகள் பிந்துகின்றன. இதனால் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு வேதனைக்குரியதாக அமைந்துள்ளது. சமத்துவம் இல்லாத நிலை எல்லா பக்கமும் நிலவுகிறது.
அமெரிக்காவிடம் தடுப்பூசி கேட்டு சில நாடுகள் பிச்சை கேட்காத குறைதான். அமெரிக்காவில் இருந்து குறுகிய நேரத்தில் விமானத்தில் சென்று விடக்கூடிய ஹைதி நாட்டுக்கு, பல மாத கால வாக்குறுதிகளுக்கு பின்னர் இப்போதுதான் முதல் முறையாக 5 லட்சம் தடுப்பூசி கிடைத்துள்ளது. அந்த நாட்டின் மக்கள்தொகை 1 கோடியே 10 லட்சம் ஆகும்.
கனடா ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 தடுப்பூசி என்ற அளவில் கொள்முதல் செய்து குவித்துள்ளது.
கொரோனா முதலில் பணக்கார நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் அவை தடுப்பூசி உற்பத்தியில் முதலில் ஈடுபட்டன. ஆனால் ஏற்றுமதி கட்டுப்பாடு அளவுகளை தங்கள் எல்லைக்குள் அவை வைத்துள்ளன.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய திட்டம் இருந்தும் பலன் இல்லை. இது மிகவும் குறைவாடு உடையதாகவும், நிதி உதவி இல்லாததுமாக உள்ளது. இதனால் தடுப்பூசி கொள்முதலில் போட்டி போடமுடியவில்லை.
பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை இளையவர்கள், மிக இளையவர்கள் என்று விரிவுபடுத்திக்கொண்டே போகின்றன. குவித்து வைத்துள்ள தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியும் நாடுகள் அதைச் செய்யாமல் கூடுதல் டோஸ் (பூஸ்டர் டோஸ்) போடுவது பற்றிய விவாதத்தில் இறங்கி உள்ளன.
ஏழை நாடுகளோ தங்கள் மக்களுக்கு அதிலும் கொரோனா பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியை போட முடியவில்லை. இது மானுட சோகமாக உருமாறி உள்ளது.
இந்த நிலை மாற பணக்கார நாடுகள் மனம் வைக்க வேண்டும், குவித்து வைத்துள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது உலகளாவிய எதிர்பார்ப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.