சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பேச்சு; ஓவைசி மீது வழக்கு

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் பேரணி நடந்தது.  அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் திரண்டனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதோடு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதுாறாக பேசியதாகவும் ஓவைசி மீது புகார் எழுந்து உள்ளது.
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் பாரபங்கி நகர போலீசார், ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இதுபற்றி, காவல் துறை கண்காணிப்பாளர் பிரசாத் கூறும்போது, வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு எதிராக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை துாண்டும் வகையிலும் ஓவைசி பேசி உள்ளார்.
பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஓவைசி திட்டமிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.