திருவிழாக்கள், அரசியல், மத கூட்டங்களுக்கு அக். 31–-ந் தேதி வரை தடை: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, செப்.10-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் அக்டோபர் 31–-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் வாழ்வாதாரங்களுக்காக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு தொற்று அதிகமானதை காரணம் காட்டி, தமிழகத்திலும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிறப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை 15–-ந் தேதி காலை 6 மணிவரை நீட்டித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 27–-ந் தேதியன்று 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா தொற்று நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது 1,600 ஆக உள்ளது. ஆனாலும் சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அதன் தாக்கம் ஏற்படாதபடி மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கேரளாவுடனான பஸ் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

3–வது அலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் அறிக்கையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா தொற்றின் 3-வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போடுவதை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்றாலும், திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடர்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள், தொற்றை தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக மாறக்கூடும்.

அக்டோபர் 31–ந் தேதி வரை தடை

எனவே கொரோனா 3–-வது அலையின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படுவதைத் தடுக்கவும், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் நிபா வைரஸ் நோயின் தாக்கம் இருப்பதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும், அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31–-ந் தேதிவரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ளவர்களில் 12 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசியும், 45 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா 3-–ம் அலையை தடுக்க தடுப்பூசியின் பங்கு மிகமுக்கியம் என்பதால் அதை அரசு ஊக்குவித்து வருகிறது. தினமும் சுமார் 3 லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவில் இருந்ததை 5 லட்சம் என்று அதிகரித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிலைகளுக்கு மாலை

தேச விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த பெருமக்களை புகழ, அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை அரசு நடத்துகிறது. கொரோனா காலத்தில் அந்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சிகளின்போது மாவட்ட கலெக்டர்கள் மட்டும் மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் (5 பேருக்கு மிகாமல்), பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 பேருக்கு மிகாமல்) சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற்று மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள், பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.

மக்கள் பண்டிகைகளை தங்களின் இல்லங்களிலேயே கொண்டாடுங்கள். அவசியத்திற்காக மட்டும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துங்கள், கூட்டம் கூடும் இடங்கள், நிகழ்வுகளுக்கு செல்வதை முற்றிலும் தவிருங்கள்.

தமிழகத்தில் 3-ம் அலை ஏற்படாமல் இருக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.