பாஜகவினரால் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை காவல்துறையால் பறிமுதல்

காஞ்சிபுரம்

பாஜகவினர் காஞ்சிபுரத்தில் அனுமதி இன்றி வைத்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும், விநாயகர் சிலை பொது இடங்களில் நிறுவுவதற்கும் தடை விதித்துள்ளது. வீடுகளில் 2 அடிக்கும் குறைவான உயரம் இருக்கக்கூடிய விநாயகர் சிலைகளுக்கு மட்டும் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

நாடெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் புத்தேரித் தெரு பகுதியிலுள்ள பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வம் என்பவரின் கடையில் இரண்டரையடி உயரமுடைய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதைப் பற்றி சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சிவக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் அங்குக் காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் வருவாய் துறையினர்  விரைந்தனர்.

அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையினருக்குத் தகவல் அளித்து அவ்விநாயகர் சிலையினை பறிமுதல் செய்து பாதுகாப்புடன் ஏகாம்பரநாதர் கோவிலுக்குக் கொண்டு சென்றனர். இந்த நிகழ்வால் அங்குச் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியிலுள்ள பாஜக நகர அலுவலகத்தில் கடந்த வருடம் வழிபட்ட விநாயகர் சிலையினை மீண்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் சுந்தர ராஜன் அந்த  சிலையைப் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரின் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் உதவியோடு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவிலுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.