இந்திய அணியில் கரோனா பாதிப்பு எதிரொலி: ஓல்டு டிராஃபோர்டு டெஸ்ட் ரத்து

 

மான்செஸ்டர்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-ஆவது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 

இந்திய அணியில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், தொடர்ந்து விளையாட இந்திய வீரர்கள் மறுத்துவிட்டதை அடுத்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலுடன் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த டெஸ்டை வரும் காலத்தில் நடத்தவும் எத்தனிக்கப்பட்டுள்ளது. 

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது 2-1 என முன்னிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில் கடைசி டெஸ்ட் ரத்தாகியுள்ளது. 

முன்னதாக, இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததால் அணியின் பிரதான பிசியோ நிதின் படேல், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பெளலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை கடைசி டெஸ்ட் தொடங்க இருந்த சூழலில் இந்திய அணியின் ஜூனியர் பிசியோ யோகேஷ் பார்மருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அவர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், இந்திய அணியினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து 5-ஆவது டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இத்தகைய சூழலில் 5-ஆவது டெஸ்டை விளையாட கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. 

அப்போதைய நிலையில் அணியில் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிந்தாலும், ஒருவேளை தொற்று பாதிப்பு இருந்து அடுத்த 96 மணி நேரத்தில் அதன் தன்மைகள் வெளித்தெரியலாம் என்று அணி வீரர்கள் கருதினர். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆட்டத்தில் பங்கேற்றால் வீரர்களிடையே அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எண்ணி ஆட்டத்தை தொடங்க அவர்கள் மறுத்துள்ளனர். பிசிசிஐ நிர்வாகிகள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கு பலனில்லாமல் போனதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் ஆட்டத்தை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பான அறிவிப்பும் வெளியானது. 

அறிவிப்பில் குழப்பம் 

ஆட்டம் ரத்து தொடர்பாக இங்கிலாந்து வாரியம் முதலில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய அணியால் ஆட்டத்துக்கான அணியை களமிறக்க முடியாமல் போனது. அத்துடன் ஆட்டத்தை இழந்தது’ என்று இருந்தது. பின்னர் அது, “இந்திய அணியால் ஆட்டத்துக்கான அணியை களமிறக்க முடியாமல் போனது’ என்று மட்டும் இருக்கும் வகையில் திருத்தப்பட்டது. 

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான விதிகளின்படி, கரோனா சூழலால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் “ஆட்டத்தை இழப்பது’ என்ற நிலை கிடையாது. தொடரில் வெற்றி பெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.