எனக்கு எண்ட் கார்டே இல்லை ; இனி ஷங்கர் சகவாசமே வேண்டாம் : வடிவேலு

சென்னை : எனக்கு எண்ட் கார்டே கிடையாது. என் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய், என நடிகர் வடிவேலு கூறினார்.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த, இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னையில் சிக்கிய காமெடி நடிகர் வடிவேலு, தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது. கடந்த 10 ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே நடித்த அவர், நான்காண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. கொரோனா தாக்கத்தின் போது, இயக்குனர் சுராஜ் உருவாக்கிய, நாய் சேகர் கதையில், வடிவேலு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.

படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சுராஜ் மற்றும் வடிவேலு ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தனர். வடிவேலு அளித்த பேட்டி: இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. வைகைப்புயலாகிய என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலே அடித்து விட்டது. துாக்கமே வராத நோயாளி ஒருவர் மருத்துவரை அணுகிய போது, அவர், அருகே நடக்கும் சர்க்கஸ் சென்று பப்பூன் செய்யும் காமெடியை பார்த்தால் மனப்பாரம் இறங்கி நன்றாக துாக்கம் வரும் என்றாராம். ஆனால் அந்த நோயாளியோ, அந்த பப்பூனே நான் தான் என்பாராம். அந்த நிலையில் தான் நான் இருந்தேன்.

கடந்த நான்காண்டுகளாக நான் நடிக்கவே இல்லை. இந்த கொரோனா காலத்தில் சொந்த பந்தங்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கொரோனா, என் பிரச்னையை சாதாரணமாக்கி விட்டது. இந்த நேரத்தில் என் காமெடி மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது.

எனக்கு வாழ்வு கொடுத்தது லைக்கா தயாரிப்பாளர் சுபாஷ்கரன். எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அவர் நல்லது செய்துள்ளார். என் பயணம் இனி நகைச்சுவை பயணமாகவே இருக்கும். கடைசி வரை மக்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். தமிழக முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவரை பார்த்த நாள் முதல் எனக்கு நல்லது நடக்கிறது. சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும் என முதல்வர் கூறியது மறக்க முடியாது.

என்னை முடக்க நினைத்தவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், எனக்கு எண்டே கிடையாது. 10 ஆண்டில் ஆறு படம் நடித்தேன். இடைபட்ட காலத்தில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வெடியாக இருந்தது. என் மீது கூறப்பட்ட அனைத்து புகார்களும் பொய். எனக்கு ரெட் கார்டு போட்டதாக சொன்னதும் பொய்யே. இனி ஷங்கர் ஏரியா பக்கமே போகமாட்டேன். அந்த சகவாசமே வேண்டாம். இனி வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன். அரசியலை விட மக்கள் விருப்பப்படி, திரையில் நடிப்போம் என வந்து விட்டேன். எதிர்காலத்தில் அரசியலில் வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

மீண்டும் நடிக்க வருவதை அறிந்து நிறைய அழைப்புகள் வருகிறது. சந்திரமுகி2 ல் நடிக்க வாய்ப்புள்ளது. லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பேசியுள்ளனர். என் சம்பந்தப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கிய கிரியேட்டர்கள் எனக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நகைச்சுவை கொடுத்துள்ளனர். உலகமே உள்ளங்கைக்கு வந்து விட்டது. இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். வெப்சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. நண்பன் விவேக் இறந்தது பெரிய இழப்பு. தற்போது அவன் விட்டு சென்ற இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.