கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் மோடி ஆலோசனை: தடுப்பூசி பணியை முடுக்கிவிட உத்தரவு

புதுடெல்லி:  நாட்டில் கொரோனா 3வது அலையின் தாக்குதல் நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஒன்றிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார். இந்தியாவில்  கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா 2வது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளும், பலிகளும்  நாட்டையே உலுக்கின. மக்கள் கொத்து கொத்தாக மடிந்தது பீதியை ஏற்படுத்தியது. ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்துள்ள கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் தற்போது 2வது அலையின் சீற்றம் குறைந்து, பாதிப்பு, பலி எண்ணிக்கை கணிசமாக  குறைந்துள்ளன. நாடு முழுவதும் குறைந்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் மக்கள் சுதந்திரமாக உள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா 3வது அலையின் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்றும், நவம்பரில் அது உச்சம் பெறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. இதனால், 3வது அலைக்கான ஆபத்து விரைவில் நெருங்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில், குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற பீதி நிலவுகிறது.இந்த அலையின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவதுதான். அதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளை எடுத்து, தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் நாளை கூட, மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம்கள்  நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், 3வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி தீவிரப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் தனது இல்லத்தில் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். இதில், பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டார். கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றங்கள் அடைவதை கண்காணிக்க, அதன் மரபணு சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அதிகளவில் கையிருப்பில் வைக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் இந்த நிலவரங்கள் விரிவாக விளக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி உற்பத்தி, விநியோகத்தின் நிலவரத்தையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்,’ என கூறப்பட்டுள்ளது.73 கோடி டோஸ் தடுப்பூசி நாட்டில் இதுவரையில் மொத்தம் 73 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், ஒரு டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தையும், 2 டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதத்தையும் எட்டியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.