கோயில்களில் தமிழில் குடமுழுக்கு: தனிக்குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப்.11–

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக, தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களைக் கொண்ட தனிக்குழுவை அமைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், “கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடக்கவுள்ளது. எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயில் உதவி ஆணையரிடம், குடமுழுக்கு நடக்கும்போது தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் ஓதப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.

இதுகுறித்து உதவி ஆணையாளர் மற்றும் கோயில் தரப்பினருக்கு மனு அளித்தும் அவர்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. முற்றிலும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தவுள்ளனர். பாரம்பரியமிக்க எங்கள் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம், போன்றவைகள் வாசிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

பழைமையான மொழி

இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு), புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. விசாரணைக்குப் பின் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், “உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன.

குறிப்பாக கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன்குளம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துகள் கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை மற்ற மொழிகளை விட பழமையானவை.

சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர். இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னராட்சி காலத்தில் 12 நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன.

தனிக்குழு அமைக்க வேண்டும்

மனுதாரர் சம்பந்தப்பட்ட கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரியுள்ளார். அந்த கோயிலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கோயில்களுக்கும் இது பொருந்தும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்களால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து தொழுதிடும் வகையில் தமிழ் அறிஞர்கள் ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை, அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான குழு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். பழமையான தமிழ் துதிப்பாடல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் அவற்றையும் சேர்த்து குடமுழுக்கு விழாவின் போது பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.