செப். 15 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து, மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வரும் 15 ஆம் தேதி முதல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் மோகன் யாதவ் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் மீண்டும் திறக்கப்படும். மாநிலத்தில் குறைந்தது 1,400 கல்லூரிகள் மற்றும் 56 பல்கலைக்கழகங்கள் 13.5 லட்சம் மாணவர்களைக் கொண்டுள்ளன. அதில் இரண்டு லட்சம் பேர் புதியவர்கள்.

செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்துமாறு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடரும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளுக்கான கால அட்டவணையை பட்டியலிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.