பட்டத்துக்கு மோதும் "பதின்' புலிகள்

 

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இளம் வீராங்கனைகளான கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ் (19), இங்கிலாந்தின் எம்மா ராடுகானு (18) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 
பதின் வயதுகளில் இருக்கும் இருவருமே போட்டித்தரவரிசையில் இடம்பிடிக்காமலேயே கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். ஆனாலும், இதற்கான பாதையில் பல முக்கிய, முன்னணி வீராங்கனைகளை அவர்கள் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த இருவரில் முதல் வீராங்கனையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற எம்மா ராடுகானு, ஓபன் எராவில் அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் தனது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருந்த கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை 6-1, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார். அதையடுத்து கடந்த 17 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் களம் கண்டிருக்கும் மிகக் குறைந்த வயது போட்டியாளராகியிருக்கிறார். 
மறுபுறம், லெய்லா தனது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை 7-6 (7/3), 4-6, 6-4 என்ற செட்களில் தோற்கடித்தார். லெய்லா மற்றும் எம்மாவால் முறையே வீழ்த்தப்பட்ட சக்காரி மற்றும் சபலென்கா ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அவர்களுக்கும் இது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாக இருந்திருக்கும். ஏனெனில் இதுவரை அரையிறுதி வரை முன்னேறியதே அவர்களின் அதிகபட்சமாக இருந்தது, இருக்கிறது. 
அதுவே இதற்கு முன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எம்மாவின் அதிகபட்சம் எதுவென்றால், விம்பிள்டனில் 4-ஆவது சுற்றில் இருந்தபோது மூச்சுத்திணறல் காரணமாக விலகினார். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் 4-ஆவது சுற்று வரை முன்னேறியது லெய்லாவின் அதிகபட்சம். 
உலகின் முன்னணி போட்டியாளர்களின் களமாகவே எப்போதும் இருக்கும் இறுதிச்சுற்று, இந்த முறை இளம் வீராங்கனைகளின் விளையாட்டுக் களமாகியிருக்கிறது. எம்மா-லெய்லா இறுதிச்சுற்று, நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும். 

 

21 ஆண்டுகளுக்கு பிறகு… 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் பதின் வயது போட்டியாளர்கள் இருவர் மோதிக் கொள்வது கடந்த 1999-க்குப் பிறகு இது முதல் முறையாகும். அந்த ஆண்டில், அப்போது 17 வயதில் இருந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸýம், 18 வயதில் இருந்த ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸýம் மோதினர். அதில் செரீனா சாம்பியனாகி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது. தற்போது லெய்லா-எம்மா மோதலில் வெல்வோரும் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.