விநாயகரை ஊர்வலமாக அழைத்து செல்லும் பழக்கமே தமிழகத்தில் இல்லை: பெ.மணியரசன் பொளேர்!

ஹைலைட்ஸ்:

பெரியாருக்கு பின்னர்தான் தமிழன், தமிழச்சிக்கு வரலாறே தொடங்கியது போன்று அவர்கள் கூறுகிறார்கள்
விநாயகர் என்று பெயர் மாற்றியதே இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்கள்தான்
கடவுள் நம்பிக்கை என்று போலி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கடவுள் நம்பிக்கையற்ற அச்சமற்ற கூட்டம்

தமிழ் தேசிய பேரியக்கத்தில் தலைவர்
பெ.மணியரசன்
, டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதன் விவரம் கேள்வி, பதில் வடிவில் பின்வருமாறு;

தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

முற்போக்கான அறிவிப்புகள் வருகின்றன. அது நிலையான செயல்பாடுகளாக மாற வேண்டும். அண்ணைத்
தமிழில் அர்ச்சனை
செய்வோம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பன போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. 1970களில் கலைஞர் கருணாநிதி தொடங்கிய திட்டம்தான் இவைகள். ஆனால், பல்வேறு காரணங்களால் செயல்பாட்டுக்கு வராமலேயே போய்விட்டது. ஜெயலலிதா அதற்கான முயற்சிகளை எடுக்கவே இல்லை. தற்போது தமிழில் அர்ச்சனை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், பெரும்பாலும் இது நடைபெறுவதில்லை. கோயில்களுக்கு செல்லும் பொதுமக்கள் அதனை கேட்பதும் இல்லை. நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, தமிழில் மட்டும்தான் அர்ச்சனை செய்வோம் என்ற உத்தரவை போட வேண்டும். சமஸ்கிருதம் கேட்பவர்களுக்கு அதில் செய்யலாம். தமிழில் அர்ச்சனை வேண்டும் என்பதை திமுகவினர் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். பின்னர் இது இயல்புக்கு வந்து விடும். அதுதான் நிலைக்கும்.

தமிழர்களுக்கு விரோதமான கட்சியா திமுக

தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்று சொல்லவில்லை. தமிழ் மொழி, தமிழ் இனம் என்பதை மறைக்கிறார்கள் என்கிறோம். அதனை மறைத்து திராவிடத்தை திணிக்கிறார்கள். மழலையர் பள்ளியில் இருந்து ஆங்கிலம் கட்டாயம் என்று ஆக்கியது திராவிட கட்சிகள்தான். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் 6ஆவது வகுப்பில் இருந்துதான் ஆங்கிலம் இருந்தது. திமுக ஆட்சியில் 3ஆம் வகுப்பில் என்று மாற்றினார்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1ஆம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் மொழிப்பாடம் மட்டுமல்லா பயிற்று மொழியாகவும் கொண்டு வந்தார். இதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், அப்போது கலைஞர் அதனை கண்டிக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் ஸ்டாலின் அதனை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. திராவிட ஆட்சியில்தான் பள்ளிகள் மூடப்படுகின்றன.

தமிழில் படித்தால் உபயோகமில்லாத படிப்பு அதில் படித்தால் வேலை கிடைக்காது என்ற மனப்பான்மையை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுதியது யார்?
பெரியார்
, அண்ணாவை தலைவர்களாக கொண்ட திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள்தான். இன்றைக்கு தமிழ் ஆபத்தில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள், காங்கிரஸ் காலத்தில் இருந்ததை விட மோசமாக உள்ளது தமிழ். தமிழை அடுக்கு மொழியாக பேசி ஆட்சியை பிடித்த அவர்கள் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை. நாடகமாடி ஆங்கிலத்தை வளர்த்தார்கள்.

விநாயகர் சதுர்த்தி தடையை உடைக்க பாஜக கோருவது பற்றி

விநாயகர் சதுர்த்தி பொதுமக்களது வீடுகளில் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி என்றுதான் அதற்கு பெயர். விநாயகர் என்று பெயர் மாற்றியதே இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்கள்தான். விநாயகரை ஊர்வலமாக அழைத்து செல்லும் பழக்கமே தமிழகத்தில் இல்லை. இதுபோன்ற அந்நிய பழக்கங்களை கொண்டு வந்தது அவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் இது சென்னையில் தான் ஆரம்பித்தது, அதனை கொண்டு வந்தவர்கள் மார்வாரி சேட்டுகள்; சமனர்கள். அவர்கள் விநாயகரை கடவுளாக கும்பிடாதவர்கள்.

விநாயகரை ஊர்வலமாக அழைத்து செல்லும் பழக்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நம்மூரில் சாமி கும்பிடுவாங்க; பிள்ளையார் சதுர்த்தின்னு பேரு; கொழுக்கட்டை, சுண்டல் செய்து பிள்ளையாருக்கு படைத்து அண்டை வீட்டாருக்கு கொடுப்பார்கள். கடவுள் நம்பிக்கை என்று போலி வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கடவுள் நம்பிக்கையற்ற, அச்சமற்ற கூட்டம். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்து ஊர்வலத்தில் ‘பாரத் மாதாகீ ஜே’ என்றுதான் முழக்கமிடுகிறார்கள். விநாயகர் அகவல் கூட படிப்பதில்லை.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர்!

தமிழ்நாடு பெரியார் மண்ணா? ஆன்மீக மண்ணா?

இது இரண்டுமே தவறு. இது தமிழ் மண். எந்த பெயரும் யாரும் சூட்ட வேண்டாம். சமூக அறிவியல்படி, மொழி, இனம், தாயகம் மூன்றும் இயற்கையின் படைப்பு. யாரும் விரும்பி உருவாக்கிக் கொள்வதில்லை. எனவே, திராவிடன் என்றோ, இந்தியன் என்றோ பெயர் சூட்ட வேண்டாம். சங்க காலத்தில் இருந்து தமிழன் என்றுதான் உள்ளது. தமிழ் மண்ணில் ஆன்மீகம் இல்லையா? தமிழ் மண்ணில் திருமந்திரன், தேவாரம், திருவாசகம் இல்லையா? தமிழ் மண் என்றால் இதில் எதுவும் இல்லையா? எங்களது தமிழில் எல்லாமே அடங்கியுள்ளது.

அதுபோல, பெரியாருக்கு பின்னர்தான் தமிழன், தமிழச்சிக்கு வரலாறே தொடங்கியது போன்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் இந்த இரண்டையும் ஏற்பதில்லை. தமிழ் மண்ணில் பல்வேறு கருத்துகள் இருக்கும். கடவுள் ஏற்போர், கடவுள் மறுப்போர் இருப்பார்கள். இந்திய தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்கள் இருப்பார்கள். மக்கள் விரும்புவது வெல்லும்; வளரும். பெரியாருக்கு முன் இந்த மண் இல்லையா? அவர் ஒரு ஜனநாயக காலத்தில் வந்தார். மக்களை திரட்ட முடிந்தது. நல்ல விஷயம்தான் பாராட்டுவோம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன் தமிழன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான். பெரியார்தான் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் என்று கூறுவதை விடுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.