136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 47 மனநல மருத்துவமனைகள் போதுமானதல்ல: நீதிமன்றம்

”மனநல சுகாதார சட்டப்படி மனநல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், “திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி மற்றும் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன்(ஓய்வு), பி.புகழேந்தி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், உத்தரவின் நகலில் மேலும் சில விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், “90 மில்லியன் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் மனரீதியான பாதிப்புகளை சந்திக்கின்றனர்” என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த நிலையில் சீனாவும், அமெரிக்காவும் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டின் முடிவில் 20 சதவீத இந்தியர்கள் மனம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 56 மில்லியன் இந்தியர்கள் மன அழுத்தத்தாலும், 38 மில்லியன் இந்தியர்கள் அதிக பதட்டத்திற்கும் ஆளாகின்றனர். 150 மில்லியன் இந்தியர்களுக்கு மன நல பிரச்னைகளில் இருந்து உதவி தேவைப்படுவதாகவும், 13 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 9.8 மில்லியன் இளைஞர்களுக்கு மன அழுத்ததால் பாதிப்பில் இருந்து மீள வேண்டியுள்ளது எனவும் பெங்களுரூ நிம்கான்ஸ் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
image
நாடு முழுவதும் 47 மன நல மருத்துவமனைகள் உள்ளன. 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் 47 மனநல மருத்துவமனைகள் என்பது போதுமானதல்ல. நாடு முழுவதும் மனநல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும். மன நல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை நல ஆலோசகர்கள் அதிகளவில் பற்றாக்குறையில் உள்ளனர். முதுகலை மருத்துவ படிப்பை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் மருத்துவர்களை உருவாக்க முடியும். வெளிநோயாளியாகவே பலரும் சிகிச்சை பெறும் நிலையில் ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சையளிக்க வேண்டும். மனநல சுகாதார சட்டப்படி, மனநல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில், மனநல சிகிச்சை முறை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிறது. இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் பின்பற்ற வேண்டும்.
உலச சுகாதார நிறுவன ஆய்வின் படி, மனநலம் மற்றும் மன அழுத்ததால் அதிகம் பேர் பாதித்துள்ள இந்தியாவில் ஒன்றிய அரசு அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து அரசுகள் உரிய சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றோருக்கு மறுவாழ்வும், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் மேற்கோள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.