6 மாதங்களில் 4 பா.ஜ.க., முதல்வர்கள் ராஜினாமா! – என்ன நடக்கிறது பா.ஜ.க.,வில்?

நடப்பு ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 4 முதலமைச்சர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி, இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகர் காந்தி நகரில், மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை நேரில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை,
விஜய் ரூபானி
வழங்கினார். குஜராத் மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்திருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ராஜினாமா செய்தது ஏன்?
ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மாறுவது எல்லாம் இயற்கையான ஒன்று. எனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார். புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க., தேசியத் தலைமையின் கீழ் எனது கட்சிப் பணியை தொடருவேன் என, தெரிவித்தார்.

6 மாதங்களில் 4 பா.ஜ.க. முதல்வர்கள் ராஜினாமா

விஜய் ரூபானியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நடப்பு 2021ம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், ராஜினாமா செய்த பா.ஜ.க. முதலமைச்சர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம், கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வின் எடியூரப்பாவின் மீது அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார். இங்கு, 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்டில் முதல் விக்கெட்

இதே போல், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.,வின் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிராக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, புதிய முதலமைச்சராக ராஜ்யசபா எம்.பி., திரத் சிங் ராவத் நியமிக்கப்பட்டார். இவர், முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தே, பெண்கள் ஆடை அணிவது உள்ளிட்ட விவகாரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து வந்தார்.

3 முதல்வர்களை சந்தித்த உத்தரகண்ட்

இது ஒரு புறம் இருக்க, இவர் ஆட்சியில் இருந்த போது தான், ஹரித்துவாரில் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடியது. 6 மாதங்களுக்குள், திரத் சிங் ராவத் எம்.எல்.ஏ., ஆக வெற்றிப் பெற வேண்டும் என்பதால், கொரோனா பரவலைக் கருதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்பாததால், அவர் பதவி ஏற்ற நான்கைந்து மாதங்களிலேயே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து, சிட்டிங் பா.ஜ.க. எம்.எல்.ஏ., புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இந்நிலையில், இந்த வரிசையில் தற்போது, குஜராத் மாநில முதலமைச்சராக ராஜினாமா செய்துள்ள விஜய் ரூபானியும் சேர்ந்துள்ளார். பா.ஜ.க. முதலமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.