பேரவையில் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்; கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தால் கைது: இந்து சமய அறநிலைய சட்டத்தில் திருத்தம்

கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கைது செய்து, ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய் யப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களில் மாவட்டக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா உட்பட 19 சட்ட மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

1959 தமிழ்நாடு இந்து சமயஅறநிலைக் கொடைகள் சட்டத்தின்படி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தால் அதுகுறித்து துறையின் ஆணையர் தவிர மற்றவர்கள் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. இக்குற்றமானது கடுமையான தன்மை வாய்ந்ததாகும்.

எனவே, சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக புகார் அளிக்கவும், அந்த குற்றத்தின் மீது கைது செய்தல் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் மேற்படி சட்டத்தின் 79-பி பிரிவை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

அதேபோல, தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் திருத்தச் சட்ட மசோதாவையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார். அதில், ‘‘1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 22/1959) 7-ஏ பிரிவானது, சமயநிறுவனங்களில் மரபுவழி சாராதஅறங்காவலர்களால் பணியமர்த்துவதற்காக, நபர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்காக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும் ஒரு மாவட்டக் குழுவை அமைப்பதற்கு வகை செய்கிறது.மாவட்டக் குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டு களாக இருக்க வேண்டும்.

2 ஆண்டுகளாக குறைப்பு

சமய நடவடிக்கைகளில் பலர்ஆர்வம் காட்டுவதால் தேவையானதிறன், அர்ப்பணிப்பு மற்றும் திறமைகொண்ட மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் பிற ஆர்வலர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது அவசியமாக உள்ளது. எனவே, மேற்சொன்ன சட்டத்தை திருத்துவதன்மூலம் மாவட்டக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசும்போது, ‘‘இந்த மசோதாவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது.

மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அமைப்பது, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணைத் தொழில்மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) சட்டத்தை நீக்குவதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட மொத்தம் 19 சட்ட மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறை வேற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.