`அமிதாப் பாராட்டு; ஜிவி-யின் மெசேஜ், அன்விக்கு தாலாட்டு!' – `கையிலே ஆகாசம்' பற்றி சைந்தவி

கடந்த ஆண்டு வெளியான `சூரரைப் போற்று’ திரைப்படம், நடிகர் சூர்யாவின் கரியரில் மைல்கல்லாக அமைந்தது. நெடுமாறனின் வெற்றி, இலக்கை நோக்கிய பலருடைய பயணத்துக்கும் உந்துதலாக அமைந்தது. படத்தின் மொத்தக் கதையையும் தாங்கிச் சுமந்த `கையிலே ஆகாசம்’ பாடல், பலருக்கும் கண்ணீரை வர வைத்தது. அண்மையில் அந்தப் பாடலைப் பார்த்த நடிகர் அமிதாப் பச்சனும், அதே உணர்வில் உருகியிருக்கிறார். 

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சூர்யாவின் `சூரரைப் போற்று’ படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருமுறையும் அந்தப் பாடலைப் பார்க்கும்போது என் கண்கள் குளமாகின. இந்தப் பாடல் மிக அழகாக, ஆழமாக, மென்மையாக மனதைத் தொடுகிறது” என்று `கையிலே ஆகாசம்’ பாடலைக் குறிப்பிட்டு, அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பாராட்டுக்கு, நன்றி தெரிவித்துள்ளார், `சூரரைப் போற்று’ படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இதுகுறித்து, ஜி.வி.பிரகாஷின் காதல் மனைவியும், இந்தப் பாடலைப் பாடியவருமான சைந்தவியிடம் பேசினோம்.

“இந்திய ரசிகர்கள் எல்லோருமே மதிக்கும் அமிதாப் சார், இந்தப் பாடலைக் கேட்டதோடு இல்லாம, ரொம்பவே விரிவா பாராட்டி எழுதியிருந்தார். அதை அவர் செய்யணும்னு அவசியமே இல்ல, ஆனாலும், அமிதாப் சாரை அந்தப் பாடல் எந்த அளவுக்கு பாதிச்சிருக்குனு அவர் எழுதியிருக்குற வரிகள் மூலமா புரிஞ்சுக்க முடிஞ்சது. என் கணவர் தேனியில பட வேலையா இருக்கார். அமிதாப் சாரின் வாழ்த்துச் செய்தியை அவர்தான் எனக்கு அனுப்பினார். அதன் பிறகு, பலரும் எனக்கும் அவருக்கும் அந்தத் தகவலை ஷேர் பண்ணி வாழ்த்தினாங்க. 

சைந்தவி

அடுத்தடுத்த புராஜெக்டுகளுக்காக ஜி.வி பிஸியா வேலை செய்யுறார். எங்க மக அன்வியைக் கவனிச்சுகிட்டு நான் சென்னையில இருக்கேன். அதனால, ரெண்டு பேருக்கும் போன்ல பேசிக்குறத்துக்குச் சரியான நேரம் அமையாததால, மெசேஜ்லதான் பேசிக்குறோம். அப்படித்தான் அமிதாப் சாரின் ட்வீட் பத்தியும் கருத்துகளைப் பகிர்ந்துகிட்டோம். அமிதாப் சாரின் இந்த சர்ப்ரைஸ் வாழ்த்து, மொத்தப் படக்குழுவுக்கும் பெருமிதமான மகிழ்ச்சி” என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தியவர், `சூரரைப் போற்று’வில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசினார்.

“ஜி.வி இசையில நான் பாடின முதல் பாடல்ல இருந்து இப்போ வரைக்குமே, தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பாடுறதுக்கான வாய்ப்பை அவர் எனக்குக் கொடுத்ததே இல்ல. எனக்காக யார்கிட்டயும் அவர் சிபாரிசும் செஞ்சதில்ல. `எனக்கு வாய்ப்பு கொடுங்க’ன்னு என் கணவர்கிட்டயும் மத்தவங்ககிட்டயும் நானும் கேட்டதில்ல. இந்தக் கொள்கையை நாங்க ரெண்டு பேரும் பெருமிதமாவே கடைப்பிடிக்குறோம். படக்குழுவினர்கள் யாராச்சும் சொல்லித்தான், அவர் இசையமைச்ச பல படங்கள்ல என்னைப் பாட வெச்சிருக்கார். `அசுரன்’ல `எள்ளு வய பூக்கலையே’ பாடலை வைக்கம் விஜயலட்சுமியைப் பாட வைக்கும் திட்டத்துலதான் இருந்தாங்க. ஷூட்டிங் தேவைக்கான அவசர சூழல்ல, டிராக் போர்ஷன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அதுவே படக்குழுவினருக்குப் பிடிச்சுப்போனதால, என் பாடலையே படத்துல வெச்சுட்டாங்க. 

மகள் அன்வியுடன் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

அதேபோலத்தான் `கையிலே ஆகாசம்’ பாடல் வாய்ப்பும் எதேச்சையா அமைஞ்சது. போன வருஷம் கர்ப்பமா இருந்த நேரம் என் அம்மா வீட்டுல இருந்தேன். அந்த லாக்டெளன் நேரத்துலதான், வழக்கத்துக்கு மாறா ரெக்கார்டிங் செட்டப்பை வீட்டுல அமைச்சு, நிக்க கூட முடியாம உட்கார்ந்துகிட்டேதான் பாடினேன். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் ஏற்கெனவே எனக்குத் தெரியும். கூடவே, எந்த இடத்துல இந்தப் பாட்டு வரப்போகுதுனு பாட வேண்டிய விதம் பத்தி ஜி.வி-யும் எனக்குச் சொன்னார். அதனால, அந்தப் பாடல் வரிகளைப் படிச்சுப் பார்த்துட்டு என்னால முடிஞ்ச உணர்வுகளை என் குரல்ல வெளிப்படுத்திப் பாடினேன்.

படம் ரிலீஸுக்கு முன்பே இந்தப் பாடலை எனக்கு அனுப்பினாங்க. எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. இந்தப் பாடலை ஒலிபரப்பிதான், அந்த நேரத்துல எங்க குழந்தையைத் தூங்க வெச்சேன். படம் ரிலீஸானப்போ, மாறனோட வெற்றியுடன் `கையிலே ஆகாசம்’ பாடலைக் கேட்கும்போது பெருமிதமாவும் உணர்ச்சிபூர்வமாவும் இருந்துச்சு. `உங்க குரல் அழ வெச்சுடுச்சு’ன்னு பலரும் அப்பவே பாராட்டினாங்க.” – சிலாகித்துக் கூறுபவருக்கு, கணவரின் இசையில் அரை டஜன் பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பு அடுத்தடுத்து அமைந்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

Also Read: “என்னோட முதல் பாட்டு வெளிய வரல… ஆனா?” – சைந்தவி உருக்கம்

`தலைவி’ பட அனுபவம் பகிர்பவர், “இயக்குநர் ஏ.எல்.விஜய் சார், `சிஸ்டர் என் அடுத்த படத்துல நீங்க பாடணும்’னு `தலைவி’யில வாய்ப்பு கொடுத்தார். போன வருஷம் லாக்டெளன் நேரத்துல, `கண்ணும் கண்ணும்’ பாடலின் இந்தி போர்ஷன் பாடலைத்தான் முதல்ல பாடினேன். அதுதான் நான் பாடின முதல் இந்திப் பாடல். என் வார்த்தை உச்சரிப்பை ஏத்துப்பாங்களான்னு பயம் இருந்துச்சு. ஆனா, என் பாடல் எல்லோருக்கும் பிடிச்சுப் போனதால, `மழை மழை’ பாடலின் இந்தி போர்ஷன் வாய்ப்பும் கிடைச்சது. அந்த ரெக்கார்டிங் நேரத்துல, வயித்துல இருந்த பொண்ணு அடிக்கடி எட்டி உதைச்சுகிட்டே இருந்தா. அதனால, ரொம்பவே பொறுமையாதான் ரெக்கார்டிங் முடிச்சுக் கொடுத்தேன். குழந்தை பிறந்த பிறகு, தமிழ்ல ரெண்டு பாடல்களும், சமீபத்துலதான் தெலுங்கு போர்ஷன்ல ரெண்டு பாடல்களும் பாடினேன்.

சில தினங்களுக்கு முன்பு, `தலைவி’ டீம் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துச்சு. அங்க கங்கனா ரனாவத் மேடமை சந்திச்சப்போ, `உங்க பாடல்கள் நல்லா இருந்துச்சு. உங்க குரல் எனக்கு நல்லா செட் ஆகியிருக்கு’ன்னு சொன்னாங்க. அதன் பிறகு பிரீமியர் ஷோவுல `தலைவி’ படத்தைப் படக்குழுவினருடன் நானும் பார்த்தேன். என் பார்வையில இது அரசியல் படமா தெரியல. ஜெயலலிதா அம்மா, அம்முவா இருந்து அம்மாவா மாறினதுதான் கதை. யாரையும் தனிப்பட்ட முறையில காயப்படுத்தாம, ஒவ்வொரு நடிகருமே மனசுல நிற்குற மாதிரி சிறப்பா நடிச்சிருக்காங்க” என்றவர், சில பர்சனல் விஷயங்களையும் பகிர்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

Also Read: “ `நான் என்ன கரடியா, புலியா’னு தேத்தினார் ராஜா சார்!’’ – சைந்தவி

“ஜி.வி அடுத்தடுத்து பிஸியா வேலை செஞ்சுகிட்டிருக்கார். அவரோட சினிமா வேலைகள்ல நானும் என் வேலைகள்ல அவரும் தலையிட மாட்டோம். நானா ஏதாச்சும் ஆலோசனைகள் கேட்டால் சில விஷயங்கள் ஷேர் பண்ணுவார். என் தனிப்பட்ட ஆல்பங்கள் எதையாச்சும் அவர்கிட்ட காட்டி, கருத்து கேட்பேன். ஆனா, மத்த மியூசிக் டைரக்டருக்கு நான் பாடின பாடலை அவர்கிட்ட காட்டி ஒப்பீனியன் கேட்கவே மாட்டேன். ஜி.வி-யின் ஸ்டுடியோவுல பாடப் போயிட்டா, அவர் மியூசிக் டைரக்டராவும் நான் பாடகியாவும் மட்டுமே நடந்துப்போம். மத்த இசையமைப்பாளர்களைவிட, ஜி.வி-யின் மியூசிக்ல பாடும்போதுதான் எனக்கு கூடுதல் பிரஷர் இருக்கும்.

ஜெயா டிவி-யில `ராகமாலிகா’ நிகழ்ச்சியில போட்டியாளர் அனுபவம்தான் எனக்கு முதல் அறிமுகம் கொடுத்துச்சு. பிறகு, பின்னணிப் பாடகியா பாட ஆரம்பிச்ச ஆரம்ப காலத்துல சில நிராகரிப்புகளை எதிர்கொண்டிருக்கேன். பாட முடியாம திரும்பியும் வந்திருக்கேன். கத்துக்குற குணம்தான் மெள்ள மெள்ள என்னை வளர்த்துச்சு. இப்பவரை தினமும் கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்க வேண்டியதும், போக வேண்டிய தூரமும் இன்னும் நிறையவே இருக்கு.

சைந்தவி

Also Read: “கங்கனாவுடன் மூணு மாத டிராவல்… 25 கிலோ எடை கூடிய ரகசியம்!” – `தலைவி’ குறித்து காயத்ரி ரகுராம்

கல்யாணத்துக்குப் பிறகு ஜி.வி வீட்டுல ஒருத்தர் எதிர்ப்பு சொல்லியிருந்தாலும்கூட, என்னால சுதந்திரமா வேலை செய்ய முடிஞ்சிருக்காது. ஆனா, அப்படியான பேச்சே இதுவரைக்கும் வந்ததில்ல. `உனக்குப் பிடிச்சதை செய்’னு சொல்லி, என் திரையிசைப் பயணத்துக்கு முடிஞ்சவரை எல்லோரும் சப்போர்ட் பண்றாங்க. இந்த விஷயத்துல நான் ரொம்ப லக்கி” என்று புன்னகையுடன் முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.