இதுவரை 4,138 மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி:சென்னை மாநகராட்சி

சென்னை, செப்.15–

சென்னை மாநகராட்சியின் சார்பில் 80 வயதிற்கு மேற்பட்ட 4,138 மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

முதல்வரின் உத்தரவுப்படி 200 வார்டுகளிலும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 26.8.2021 அன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 1.35 லட்சம் தடுப்பூசிகளும், 12.9.2021 அன்று நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 1.91 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 13–ந் தேதி அன்று மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மாநகராட்சி மருத்துவக் குழுவினரால் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 4 ஆயிரத்து 138 நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 779 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,359 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியின் 044–2538 4520 மற்றும் 044–4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அவர்களின் இல்லங்களுக்கு சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.