"என் ஸ்கூலும், ஆசிரியர்களும்தான் நான் நடிக்கக் காரணம்!"- முன்னாள் மாணவர்கள் விழாவில் காளி வெங்கட்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், ’முண்டாசுபட்டி’, ’மாரி’, ‘சூரரைப் போற்று’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகருமான காளிவெங்கட் கலந்துகொண்டார். பள்ளி மைதானத்தில் மரக்கன்று நட்ட அவர், பின்னர், தன்னுடன் பயின்ற நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

மரக்கன்று நட்ட காளி வெங்கட்

ஆசிரியர் தின விழாவில் பேசிய நடிகர் காளிவெங்கட், “கழுகுமலைக்கு அருகிலுள்ள கூழைத்தேவன்பட்டிதான் என்னோட சொந்த ஊரு. இந்தப் பள்ளியில்தான் 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். நான் நின்று பேசும் இந்த வகுப்பறையில்தான் 8-ம் வகுப்பு படிச்சேன். நான் சினிமாத்துறைக்குள் நுழையவும், என்னோட நடிப்புக்கான முதல் விதை முளைக்கவும் காரணமாக இருந்தது இந்தப் பள்ளிக்கூடமும், எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும்தான்.

Also Read: The Father : ஒரு அபார்ட்மென்ட் அறையும் 80 வயதுக் குழந்தையும்… கண்களைக் குளமாக்கும் காவியம்!

8-ம் வகுப்பு படித்தபோது, என்னுடன் படித்த நண்பர் சக்திரபிரகாஷுடன் சேர்ந்து, ஓய்வு நேரங்களில், டீச்சர் வகுப்பறைக்கு வரும் வரைக்குமான நேரங்களில் மேசையில் விரல்களால் தட்டி பாட்டுப் பாடுவது வழக்கம். அப்போ, சண்முகசுந்தரி டீச்சர், ‘கலை இலக்கியப் போட்டி நடக்கப் போகுது. கிராமியப் பாட்டு பாடுறதுக்கு யாருல்லாம் ரெடியா இருக்கீங்க’ன்னு கேட்டார். அப்போ, நண்பர் சக்திரபிரகாஷ் என்னை கையைப் பிடிச்சு உயர்த்திக் காண்பித்தார். ’என்னடா காளி, உனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு சொல்லுறதுக்கு இவ்வளவு தயக்கமா?’ எனச் சொல்லி, அந்த டீச்சர் எனக்குள்ள இருந்த கூச்சத்தினை உடைத்து, என்னைப் பாட்டுப்பாட வச்சு சக மாணவர்கள் மத்தியில கைதட்டல் வாங்கிக் கொடுத்தார். அந்த கலை இலக்கிய போட்டியில் பாடல் பாடுதலில் கலந்துகொண்டு 2-வது பரிசு வாங்கினேன்.

தன்னுடன் படித்த நண்பர்களுடன் காளி வெங்கட்

அடுத்தடுத்து பல போட்டிகளில் தயக்கமின்றி, ஆர்வத்துடன் கலந்துக்கிட்டேன். அந்த டீச்சர் வாங்கிக்கொடுத்த கைதட்டல்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. இன்னொரு ஆசிரியரான சேதுராஜ், ’படிப்பு என்பது எழுதுவது, மனப்பாடம் செய்வது கிடையாது, பாடல், கதை என இலக்கியத்துடன் கூடியது’ என அடிக்கடி சொல்லுவார். நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது என்னோட பள்ளி ஆசிரியர்கள்தான். எனக்கு தினமும் நான் படித்த இந்தப்பள்ளியின் நினைப்பு வந்துடும். இங்கிருந்துதான் நான் எனது நடிப்புக்குத் தேவையான விஷயங்களை எடுத்து வருகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.