ஓய்வு பெற்றார் மலிங்கா

 

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா (38), அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

வேகப்பந்துவீச்சாளரான அவர், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மிரளும் வகையில் யார்க்கர் பந்துகள் வீசுவதில் வல்லவராக இருந்தார். ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் ஒன்டே கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, தற்போது டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்து வரும் இளம் தலைமுறையினருக்கு அந்த விளையாட்டில் வழிகாட்டுவதற்கு தாம் ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே, வரும் நாள்களில் அவர் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் செயல்பட வாய்ப்புள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் களம் கண்ட மலிங்கா, கடைசியாக 2020 மார்ச்சில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். 

2014 டி20 உலகக் கோப்பை போட்டியில் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி சாம்பியன் ஆகியிருந்த நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கும் கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்த அப்போட்டி, பின்னர் கரோனா சூழல் காரணமாக நடப்பாண்டு அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, எதிர்வரும் அந்த போட்டிக்கான இலங்கை அணி கேப்டனாக டாசன் ஷனகா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஃபார்மட்    ஆட்டங்கள்    விக்கெட்டுகள்

டெஸ்ட்    30    101 
ஒன் டே    226    338 
டி20    84    107 
ஐபிஎல்    122    170


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.