கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதத்தில் 9195 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் 4 மாதத்தில் கொரோனாவுக்கு 9 ஆயிரத்து 195 பேர் பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறைந்த பாடு இல்லை. கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில் அரசின் அதிரடி நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து இருக்கிறது. அந்த வகையில் நேற்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி உள்ளது. தொற்று சதவீதம் 15.12 ஆகும். சிகிச்சை பலனின்றி 129 பேர் மரணமடைந்தனர். ஆகவே இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,779 ஆக உயர்ந்து உள்ளது.இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களில் 30 சதவீதம் பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் ஆனதால் இறந்தாக சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பிரனாயி விஜயன் தலைமையில் கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மாநில சுகாதாரத்துறை ஆய்வு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: கேரளாவில் கடந்த ஜூன் 18 முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை 9195 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்து உள்ளனர். இதில் வீட்டில் வைத்து 514 பேரும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 146 பேரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாளில் 794 பேரும், 2வது நாளில் 704, 3வது நாளில் 640 பேரும் மரணமடைந்து உள்ளனர். மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தாமதம் ஆனால் இந்த நாட்களில் மொத்தம் 2799 பேர் இறந்து உள்ளனர். இது 30.44 சதவீதம் ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், சர்க்கரை ேநாய் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா பாதித்து வீடுகளில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.