நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்: ஏலம் தொகையை சமர்ப்பித்துள்ளதாக தகவல்..!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதென ஒன்றிய அரசு ஏற்கெனவே முடிவெடுத்திருந்தது. இதற்கு முன்னர், 2018ம் ஆண்டு 76% பங்குகளை விற்பனை செய்ய முயன்றபோது யாரும் இதை ஏலம் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது ஸ்பைஸ ஜெட் மற்றும் டாடா குழுமம் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை பெற முயன்றுள்ளன. இதில் டாடா நிறுவனம் தனது ஏலம் தொகையை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும், இந்நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான இறுதி தேதி செப்.15 என ஏற்கெனவே மத்திய அரசு வரையறுத்திருந்ததை மாற்ற இயலாது என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விற்பனை பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ள ரூ.43,000 கோடி கடனில், ரூ.22,000 கோடி இதன் தாய் நிறுவனமான AIAHL நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் கடன்கள் முழுவதும் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளும், விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதலை கையாளும் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மும்பை கட்டிடம் மற்றும் டெல்லியில் உள்ள ஏர் இந்தியா இல்லம் ஆகியவையும் இந்த விற்பனை திட்டத்தில் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.