பெண்கள் கல்வி கற்கலாம்; ஆனால் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன: தலிபான்களின் கெடுபிடிகள் என்னென்ன?

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு அனுமதியளிக்கப்படுகிறது ஆனால் அதற்கு சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று தலிபான்களின் உயர் கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அப்துல் பாகி ஹக்கானி, “தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெண்கள் மீது கொண்டிருந்த பார்வை வேறு. இப்போதுள்ள பார்வை வேறு. ஆப்கானிஸ்தானில் என்ன மிச்சம் மீதி இருக்கிறதோ அதிலிருந்து நாங்கள் நாட்டைக் கட்டமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பெண் கல்விக்கு நாங்கள் அனுமதிக்கிறோம்.

ஆனால் அவர்கள் ஹிஜாப் அணிந்தே கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் பாடம் நடத்துவர். நல்ல வேளையாக இங்கே பெண் ஆசிரியர்கள் போதிய அளவில் உள்ளனர். இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். கல்வி நிலையங்கள் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். ஆப்கானிஸ்தானின் பல்கலைக்கழகங்களில் இருந்து பயின்று வெளியேறுபவர்கள் உலகின் பிற நாடுகளின் மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இருபாலர் வகுப்புகளுக்கு இடமில்லை. கல்லூரிகளில் இருபாலர்கள் வகுப்புகள் நடந்தால் நடுவில் திரை வைக்கப்பட வேண்டியது கட்டாயம். பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் வகுப்பு எடுக்க நேர்ந்தால் ஆன்லைன் வாயிலாக வகுப்பெடுக்கலாமே தவிர நேரடியாக வகுப்பு எடுக்க முடியாது” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் ஏற்கெனவே ஆண், பெண் மாணாக்கர் மத்தியில் திரை வைக்கப்பட்டே பாடம் நடத்தப்படுகிறது.
செய்திச் சேனல்களிலும் பெண் செய்தி வாச்சிப்பாளர்கள் கூடாது என்று தலிபான்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் டோலோ நியூஸ் போன்ற செய்தி நிறுவனங்களில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் இன்னும் பணியில் உள்ளனர்.

ஏற்கெனவே தலிபான் கல்வி அமைச்சர் ஷேக் மவுல்வி நூருல்லா முனீர், இன்றைய காலகட்டத்தில் முதுகலைப் பட்டத்துக்கோ, முனைவர் பட்டத்துக்கோ மதிப்பில்லை. முல்லாக்கள், தலிபான்கள் இன்று ஆப்கனிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ளனர். அவர்களிடம் எந்தப் பட்டமும் இல்லை. ஏன் பலரும் பள்ளிப் படிப்பைக் கூட படிக்கவில்லை. ஆனால் உயர்ந்து நிற்கவில்லையா? என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.