தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 50க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று

சென்னை, அக்.9-

தமிழகத்தில் 1,359 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 மாவட்டங்களில் தொற்று குறைந்து இருக்கிறது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 770 ஆண்கள், 589 பெண்கள் என மொத்தம் 1,359 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 169 பேரும், கோவையில் 140 பேரும், செங்கல்பட்டில் 103 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 3 பேரும், தென்காசியில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 83 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில் 25-க்கும் குறைவானவர்களுக்கும், 10 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 72 லட்சத்து 67 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 26 லட்சத்து 75 ஆயிரத்து 592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 16 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 4 பேரும் என 20 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 754 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,473 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 16 ஆயிரத்து 379 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.