நாளை தடுப்பூசி செலுத்தும் அதிர்ஷ்டசாலிகளுக்கு வாஷிங்மெஷின்-செல்போன் பரிசுகள்

மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுகிழமை) 5-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 18 வயதினை கடந்தவர்களின் மக்கள் தொகை 24 லட்சத்து 45 ஆயிரமாக உள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 14 லட்சத்து 55 ஆயிரத்து 294 மக்கள் அதாவது 60 சதவீதம் நபர்கள் செலுத்தி உள்ளார்கள்.

மேலும் கொரோனா தடுப்பூசி 2-ம் தவணையை 3 லட்சத்து 68 ஆயிரத்து 292 மக்கள் அதாவது 15 சதவீதம் நபர்கள் செலுத்தி உள்ளார்கள்.

புறநகர் பகுதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மூலம் 63 சதவீதம் மக்களும், மாநகர பகுதிகளில் 55.74 சதவீதம் மக்களும் பயனடைந்துள்ளார்கள்.

கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில் 2-ம் தவணை செலுத்திக் கொள்ளும் காலம் முடிந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 நபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு குறுந்தகவல் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2-ம் தவணையை செலுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். நாளை நடைபெறும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமிற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதிகள் முழுவதும் மெகா தடுப்பூசி திருவிழா 5-ம் கட்டமாக நாளை (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சுமார் 500 இடங்களில் 75000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசி செலுத்துபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து மெகா பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அவற்றில் முதல் பரிசாக ஒரு நபருக்கு வாஷிங்மெஷின், 2-வது பரிசாக 2 நபர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போனும், 3-வது பரிசாக 10 நபர்களுக்கு பிர‌ஷர் குக்கர்களும், சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்… நேற்றைவிட சற்று குறைவு- தமிழகத்தில் இன்று 1,344 பேருக்கு கொரோனா பாதிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.