உயிரை பணயம் வைத்து தடுப்பூசி எடுத்துச் செல்லும் பெண்கள்: பிரதமர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: கரணம் தப்பினால் மரணம் ஏற்படும் வகையிலான உயரமான மலைப்பாதையை இரு பெண் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிகளுடன் கடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அவர்களை பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் மே முதல் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் சுமார் 95 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தினசரி 50 லட்சம் டோஸ்களுக்கும் மேல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி நேற்று (அக்.,09) மட்டும் 60,66,412 டோஸ் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கரணம் தப்பினால் மரணம் ஏற்படும் வகையிலான உயரமான மலைப்பாதை(!) ஒன்றில் இரு பெண் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி பெட்டியுடன் ஒருவருக்கொருவர் உதவியபடி மெல்ல நடந்து செல்கிறார்கள்.

அதனை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், “இது போன்ற சுகாதாரப் பணியாளர்களின் கடின உழைப்பால் தான் உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான தடுப்பூசி இயக்கம் இன்று வெற்றிகரமாக வளர்ந்து வருகிறது. நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்,” என, கூறியிருந்தார். இதனை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “சக குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொருவரும் மேற்கொண்டுள்ள மகத்தான முயற்சியின் ஒரு எடுத்துக்காட்டு தான் இது. இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக்கிய ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்,” என, வாழ்த்தியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.