ஏசியில் மின்கசிவால் தீவிபத்து அறைக்குள் மூச்சுத்திணறி தம்பதி கருகி பலி

* அதிர்ஷ்டவசமாக மகன், மகள் தப்பினர் * அதிகாலை நேரத்தில் மதுரையில் பரிதாபம்மதுரை: மதுரையில் அதிகாலையில் படுக்கை அறைக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் கணவர், மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, ஆனையூர், எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன்(45). ஆர்கானிக் சோப் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு கம்பெனியை நடத்தி வருகிறார். இவரது 2வது மனைவி சுபா(37). முதல் மனைவி சித்ராவை கடந்த 2004ல் விவகாரத்து செய்து விட்டு, 2013ல் சுபாவை திருமணம் செய்துள்ளார். சுபாவின் முதல் கணவரான முத்துக்குமாருக்கு பிறந்த குழந்தைகளான காவியா(17), கார்த்திகேயன்(14) ஆகியோருடன் சக்தி கண்ணன் ஒன்றாக வசித்து வந்தார். 4 பேரும் மாடியில் உள்ள ஏசி அறையில் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 4 பேரும் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மழை பெய்ததால் குளிர் அதிகரித்தது. இதனால் அறையிலிருந்து எழுந்த காவியா, கார்த்திகேயன் இருவரும் வீட்டின் கீழ் அறைக்கு சென்று தூங்கியதாக தெரிகிறது.நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வெளியேறி உள்ளது. கண் விழித்த தம்பதி பாத்ரூமில் இருந்த தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி அணைக்க முயற்சித்துள்ளனர். அப்போது ஏசி திடீரென வெடித்துச் சிதறி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறையில் இருந்த மின் வயர்களிலும் தீப்பற்றி பரவியது. அறை முழுக்க கரும்புகை பரவியதால், வெளியேற முடியாமல் இருவரும் மூச்சு திணறி கருகிய நிலையில் உயிரிழந்தனர். அதிகாலையில் முதல் மாடியிலிருந்து வெளியேறிய கரும்புகையைக் கண்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டனர். சப்தம் கேட்டு மகள் காவியா, மகன் கார்த்திகேயன் இருவரும் எழுந்தனர். அப்போதுதான் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்து, மேல்மாடிக்கு ஓடினர். அறைக்குள் செல்ல முடியாத அளவிற்கு கரும்புகை வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் தெரிவித்த தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள், படுக்கை அறைக்குள் கருகிய நிலையில் இறந்து கிடந்த சக்தி கண்ணன், சுபா இருவரது உடல்களையும் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பெற்றோர் உடலைப்பார்த்து பிள்ளைகள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சக்தி கண்ணன், சுபா உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, உயிரிழப்பிற்கு வேறு வேறு காரணம் இருக்குமா என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.தீ விபத்து குறித்து, அதிகாரி ஒருவர் கூறும்போது, “தீ விபத்து குறித்து தகவல் கிடைத்து தீயணைப்புத்துறையினர் வந்தபோது கணவன், மனைவி இருவரும் உடல் கருகி இறந்து கிடந்தனர். தீ முதலில் மாடியின் முன் ஹாலில் பிடித்து அதன்பிறகு ஏசி அறைக்கு பரவியதா எனவும் விசாரித்து வருகிறோம். ஹாலில் உள்ள பூஜை அறையில் கொலு வைத்து விளக்கேற்றி உள்ளனர். இங்குள்ள மரத்திலான பொம்மைகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகியுள்ளன. இதனால்தான் படுக்கை அறையிலிருந்து வெளியேறி ஹால் பகுதிக்கும் தம்பதியால் வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். சுபாவின் தந்தை ராஜசேகர் புகாரில் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.