ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் பிளே ஆஃப் சுற்று: இன்று சென்னை – டெல்லி மோதல்

14-வது ஐ.பி.எல்.(IPL) கிரிக்கெட்டில் லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று (10) சிஎஸ்கே, டெல்லி அணிகள் மோத உள்ளன.

அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன.

ஐ.பி.எல் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

நடப்பு சாம்பியன் மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை). நடைபெறவுள்ளது இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்சும், சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்விiaயும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது .சென்னை அணியின் உத்வேகத்தை சற்று பாதித்துள்ளது. இதே மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய போட்டியில் சென்னை அணி 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த இலக்கை அவர்கள் 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்ததும் கவனிக்கத்தக்கது.

எனவே மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த துடுப்பாட்டம் அவசியமாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (533 ஓட்டங்கள்), பாப் டு பிளிஸ்சிஸ்சும் (546 ஓட்டங்கள்) திருப்திகரமான தொடக்கம் தருகிறார்கள். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, கேப்டன் டோனியின் சீரற்ற பேட்டிங் பெரும்பாலும் சறுக்கி விடுகிறது.

அதேவேளையில் 96 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள தோனி, 160 ரன்கள் எடுத்துள்ள சுரேஷ் ரெய்னா ஆகியோரது துடுப்பாட்டம் கவலையளிப்பதாக உள்ளது. பந்து வீச்சில் தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர், டுவைன் பிராவோ சவால் அளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இதே போல் பந்து வீச்சிலும் அவ்வப்போது தான் நன்றாக செயல்படுகிறார்கள். ஆனாலும் நெருக்கடியான தருணங்களை கையாள்வதில் கெட்டிக்காரரான டோனியின் தலைமைத்துவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே டெல்லியிடம் லீக்கில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க இதைவிட கச்சிதமான சந்தர்ப்பம் அமையாது. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

டெல்லி கேப்பிட்டல்சை பொறுத்தவரையில் நடப்பு தொடரில் எல்லாவிதமான மைதானங்களிலும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை (10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி) வெளிப்படுத்தியுள்ளது. தோற்ற 4 ஆட்டங்களில் கூட நெருங்கி வந்து தான் வெற்றியை கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

அந்த அணியில் ஷிகர் தவான் (544 ஓட்டங்கள்), பிரித்வி ஷா (401 ஓட்டங்கள்), அணித்தலைவர் ரிஷாப் பண்ட் (362 ஓட்டங்கள்), ஸ்ரேயாஸ் அய்யர் (6 ஆட்டத்தில் 144 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்தில் சிறப்பாக உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ரபடா, அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக நோர்டியா ஓவருக்கு சராசரியாக 5.59 ரன்னும், அக்‌ஷர் பட்டேல் 6.43 ரன்னும் விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டியுள்ளனர். தசைப்பிடிப்பால் கடந்த 5 போடடிகளில் பங்குகொள்ளாத சகல துறை ஆட்டக்காரர்  மார்கஸ் ஸ்டோனிஸ் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் 7 விக்கெட், 3 விக்கெட் வித்தியாசங்களில் டெல்லி அணி, சென்னையை புரட்டியெடுத்தது. அது மட்டுமின்றி கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் இவர்களிடம் சென்னை தோல்வி அடைந்தது. இதனால் டெல்லி வீரர்களின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும். அவர்களது பயிற்சியாளர் ரிக்கிபொண்டிங்கின் திட்டமிட்ட வழிநடத்துதலும் டெல்லி அணியின் வீறுநடைக்கு பக்கபலமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி அணி, இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. அதற்குரிய முதற்படிக்கட்டாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.