கப்பலுக்குள் போதை பொருளை கொண்டு சென்றது எப்படி? – என்.சி.பி., பகீர் தகவல்!

போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சொகுசு கப்பலுக்குள் பெண் ஒருவர் நாப்கினுக்குள் மறைத்து போதைப் பொருளை கப்பலுக்குள் எடுத்துச் சென்றதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.

தற்போது ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரித்து, போதைப் பொருள் வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் ஷாருக் கானின் மகன் இதில் சிக்கி உள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

ஆர்யன் கானின் மொபைல் போனை ஆராய்ந்ததில் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் சங்கேத மொழியில் வாட்ஸ் அப் மூலம் அவர் பேசியதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்து உள்ளனர். இவ்வழக்கில் ஆர்யன் கான் ஏ-1 ஆக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சொகுசுக் கப்பலுக்குள் எவ்வாறு போதைப் பொருள் கொண்டு வரப்பட்டது என்ற தகவலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வெளியிட்டு உள்ளனர். “வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் ஒருவர், நாப்கினுக்குள் அடைத்து போதைப் பொருட்களை சொகுசுக் கப்பலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அதனை விநியோகித்து உள்ளனர். நாப்கின் என்பதால் பரிசோதனை செய்யாமல் விட்டுள்ளனர்,” என அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.