திராவிட மாடலில் தமிழகம் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடலில் தமிழகம் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

முதல்வர் பேசியதாவது:

தமிழகத்தில், பேராசிரியர் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியம், ஜான் ட்ரீஸ், அமர்த்தியா சென், எஸ்.நாராயண் உட்பட முக்கியமான ஐந்து ஆளுமைகளைக் கொண்டு பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறோம்.. இந்தியாவில் எந்த மாநிலமும் அமைக்காத ஆலோசனைக் குழு தமிழகத்தில் மட்டும்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் பாராட்டி வருக்கின்றனர்.

இவர்களில், எஸ்.நாராயண் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார் ”கலைஞர் ஆட்சி காலமானது சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக கிராம அளவிலும் கூட்டுறவு மட்டத்திலும் அமைப்பு ரீதியாகவும் அமைதந்தது” என்று எழுதி இருக்கிறார். இதுதான் “திராவிட மாடல்” என்று குறிப்பிட்டுள்ளார்!

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி! அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி! இது தான் திராவிட மாடல் என்பது.

அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை! அதனை நோக்கித்தான் எங்களுடைய எல்லா திட்டமிடுதல்களும் அமைந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக உரிமை, சமூக சுய மரியாதை இவை எல்லாம் உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த ஆட்சியை நடத்திகொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது.

நமது வளத்தை கொண்டு நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம்.திமுக அரசு அமைந்த இந்த நான்கு மாத காலத்தில் – தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது. இரண்டு முக்கியமான மாநாடுகளை அரசு நடத்தியிருக்கிறது.

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ – தமிழ்நாடு என்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். மிக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற மாநாடு அது. தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே எனது இலட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக தொழில்புரிவதை எளிமை ஆக்க ஒற்றைச் சாளர முறை – Single Window System இணையதளம் 2.0-வை நான் தொடங்கி வைத்தேன்.

புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும். அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு 35 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. முதன் முதலாக 17,141 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலமாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னால் ஏற்றுமதி தொடர்பான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தினோம். “ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” என்று அந்த மாநாட்டுக்குத் தலைப்பு கொடுத்து இருந்தோம். அன்றைய தினம் 2,180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன.

1.93 இலட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு அதற்கான முழுமூச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறோம்.

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுகுறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதி ஆகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்து திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இயற்கைச் சூழல் அனைத்துத் தொழில்களுக்கும் இடமளிப்பதாக இருக்கிறது. மனித வளம் என்பதும் சிறப்பானதாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஆட்சி மற்றும் அரசியல் சூழலும் மாறி இருக்கிறது என்பதை இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நிறுவனங்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு.

கரோனாவைக் கட்டுப்படுத்தியதில் தொடங்கி – தமிழக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் கவனத்தை இன்றைய தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

இந்த வெற்றிகரமான நடவடிக்கைகளை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லுங்கள்.

அரசைப் பாராட்டி எழுதுங்கள் என்று நான் கட்டளை போடவில்லை. விமர்சனங்கள் வையுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறோம்.

என்னுடைய வருத்தமெல்லாம் சிறு தவறு நடக்கும்போது அதனை பெரிதாக விமர்சிக்கும் சில பத்திரிகைகள் – பெரிய நன்மைகளைச் செய்யும்போது சிறு அளவில் கூட பாராட்டுவது இல்லையே என்பதுதான்.

பாராட்ட வேண்டியதற்கு பாராட்டுபவருக்குதான் திட்டுவதற்கான உரிமையும் இருக்கிறது.

“காரிருள் நீக்கும் கதிரொளியாக” அனைத்து ஊடகங்களும் செயல்பட வேண்டும் என்பதை இந்த விழாவின் மூலமாக என்னுடைய வேண்டுகோளாக நான் எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.