நாப்கினில் அடைத்து சொகுசு கப்பலுக்குள் போதைப்பொருள் கடத்தல்: என்.சி.பி.,| Dinamalar

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்டோர் பிடிபட்ட சொகுசு கப்பலில், பெண் ஒருவர் நாப்கினுக்குள் மறைத்து போதைப் பொருளை கப்பலுக்குள் எடுத்துச் சென்றதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி.,) போலீசார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கார்டெலியா எனும் சொகுசு கப்பலில் போதைப் பொருளுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். தகவலறிந்து ரெய்டு நடத்திய என்.சி.பி.,யினர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களின் அலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த 8 பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரித்து, போதைப்பொருள் வழக்கில் மேலும் 11 பேரை கைது செய்துள்ளனர்.

ஆர்யன் கானின் அலைபேசியை ஆராய்ந்ததில் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் சங்கேத மொழியில் வாட்ஸ்ஆப் மூலம் அவர் பேசியதாக என்.சி.பி.,யினர் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் ஆர்யன் கான் ஏ-1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி அவரது வழக்கறிஞர் கூறுகையில், “அழைப்பின் பேரிலேயே ஆர்யன் கான் சொகுசுக் கப்பல் விருந்துக்குச் சென்றார். அவரிடம் போர்டிங் பாஸ் கூட இல்லை. அங்கு அவருக்கு அறைகள் இல்லை. அவரிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யவில்லை. வாட்ஸ்ஆப் சாட்களை வைத்தே அவரை கைது செய்துள்ளனர்,” என்றார்.

இந்நிலையில், சொகுசுக் கப்பலுக்குள் எவ்வாறு போதைப் பொருள் கொண்டு வரப்பட்டது? என்ற தகவலை என்.சி.பி.,யினர் வெளியிட்டுள்ளனர். “வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் ஒருவர் நாப்கினுக்குள் அடைத்து போதைப் பொருட்களை சொகுசுக் கப்பலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அதனை விநியோகித்துள்ளனர். நாப்கின் என்பதால் பரிசோதனை செய்யாமல் விட்டுள்ளனர்,” என, தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.