மோடி முன்னிலையில் இந்தியா-டென்மார்க் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி:
டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பிரதமர் மெட்டா பிரெடெரிக்சனை, பிரதமர் மோடி வரவேற்றார். 
டென்மார்க் பிரதமர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டென்மார்க் பிரதமர்,‘உலகின் பிற பகுதிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய நபர் பிரதமர் மோடி’ என்று புகழுரை சூட்டினார்.
இந்நிலையில், இந்தியா டென்மார்க் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன.நிலத்தடி நீராதாரம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்  இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் டென்மார்க்,  டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்நிலைகளின் வரைபடம் ஆக்குதல்  தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பாரம்பரிய அறிவு குறித்து அறிய டிஜிட்டல் நூலக வசதி ஏற்படுத்துதல் தொடர்பாக டேனிஷ் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் – அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்  இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றவாறு இயற்கை குளிரூட்டிகள் அமைப்பது தொடர்பாக ஐ.ஐ.டி பெங்களூரு – டான்போஸ் ஆலை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் டென்மார்க் அரசாங்கம் இடையேயான கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியா பிரதமர் - டென்மார்க் பிரதமர்
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்கு பின் பிறநாட்டு தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.நம் நாட்டின் சிந்தனை குழுக்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளன. அதை பற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.