ரஷ்யாவில் விமானம் விழுந்து விபத்து: 16 பேர் பலி| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் இன்று விமானம் சென்று கொண்டிருந்தது. திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்த விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் விமான இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு இந்த விமானம் சொந்தமானது என தெரியவந்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.