“ராஜூ, மதுரைக்கு நீதான் இறுதிவரை மாவட்டச் செயலாளர் என்றார் ஜெயலலிதா'' – செல்லூர் ராஜூ

“ராஜூ, மதுரைக்கு நீதான் இறுதிவரை மாவட்டச் செயலாளர் என்றும், எதற்கும் கோபப்படக்கூடாது என அறிவுரை கூறி ஜெயலலிதா என்னை பக்குவப்படுத்தினர்.” என்று இன்று மதுரையில் நடந்த அதிமுக பொன்விழா ஆலோசனைக்கூட்டத்தில் மலரும் நினைவுகளைப் பேசித் தொண்டர்களை உற்சாகமாகப்படுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தொடர்ந்து பேசும்போது, “எம்.ஜி.ஆர் ரசிகனான நான் அமைச்சராக இருந்தேன் என்பதில் பெருமையாக உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன். அதிமுக கரை வேஷ்டிதான் சாகும்போதும் என் உடலில் இருக்கும். லட்சியத் தொண்டனாக இருப்பேன். அதிமுக ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் ஒன்றுதான்.

நான் காரை விட்டு இறங்கினால் சாதாரண தொண்டன்தான். மக்களின், தொண்டர்களின் அன்பு, ஆசை காரணமாகத்தான் பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்தேன். நாக்கில் பல்லை போட்டு பேச முடியாத அளவுக்கு, யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு துறை அமைச்சராக இருந்தவன். அமைச்சராக இருந்த போது என்றும் என் நிலையை மாற்றி கொண்டதில்லை.

Also Read: “மேயர் பதவியைப் பிடித்தால்தான் நாம் கொண்டுவந்த திட்டங்களைத் தொடங்க முடியும்!’’ – செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறையில் பல தவறுகளை களைந்து, பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்தேன். கூட்டுறவுத்துறையை மேம்படுத்த சிந்தித்து செயலாற்றியவன். என்னைப் பற்றி யார் என்ன சொன்னலும் நான் கவலைப்படுவதில்லை. 119 வருட வரலாறு கொண்ட கூட்டுறவுத்துறையில் நான் அமைச்சரான பிறகுதான், அத்துறையில் சிறப்பான சேவைக்கு 28 விருதுகளை பெற்றுள்ளேன்.

ராஜூ, மதுரைக்கு நீதான் இறுதி வரை மாவட்ட செயலாளர் என ஜெயலலிதா கூறினார். கோபப்கூடாது என எனக்கு அறிவுரை கூறி பக்குவப்படுத்தினர். திராவிட இயக்கத்தில் அதிகளவு தியாகம் புரிந்த இயக்கம் அதிமுக.

Also Read: `கலகம் மூட்டத் தயாராகும் அதிமுக வேட்பாளர்; ஸ்டாலினை சந்தித்த டிஸ்மிஸ் புள்ளி’! – கழுகார் அப்டேட்ஸ்

செல்லூர் ராஜூ

நாம் சாதாரணமானவர்கள் அல்ல. 50 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அதிமுக. நம் கட்சியில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி. திமுகவில் தலைவர் பதவி முதலமைச்சர் பதவி கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே. ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். அதற்கு எடுத்துக்காட்டுதான் இபிஎஸ்-ஒபிஎஸ்.

தலைவர்களின் தவறான வியூகத்தால்தான் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. தற்போது கட்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், அதனை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவபடிப்பு கனவாக இருக்க கூடாது, எளிதாக இருக்க வேண்டும் என 7.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடியார் கொடுத்தார். எந்தத் திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வந்து அமல்படுத்தியதாக வரலாறு இல்லை.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சாதாரணமானவர்கள் உயரமான இடத்திற்கு வரலாம். அதிமுகவை விட்டு ஓடியவர்களை பற்றி கவலையே கிடையாது. இன்று திமுகவை நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தான் காரணம். திமுக அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள் பலர் அதிமுகவில் இருந்து அடையளம் காணப்பட்டு அங்கு சென்றவர்கள். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.

தலைமையை நம்பி இந்த இயக்கம் இருந்ததில்லை. தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது. உண்மையான திராவிட இயக்கம் அதிமுக மட்டுமே. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் என்றைக்கும் சோடை போகாது. உதயநிதி தான் நடிக்கும் படத்தில் தன் தாத்தா கருணாநிதியை, அப்பா ஸ்டாலினை காண்பித்துள்ளாரா? திமுக கொடியை காட்டி நடித்துள்ளாரா? ஆனால் எம்ஜிஆர், திமுக கொடியை, அண்ணாவை தன் படங்களில் காண்பித்து இயக்கத்தை வளர்த்தார். திமுகவில் அண்ணா படம் தற்போது உள்ளதா.? கலைஞர் படத்தையே மறைத்துவிட்டனர். ஸ்டாலின் உதயநிதி படங்கள் மட்டுமே உள்ளன.

செல்லூர் ராஜூ

திராவிட இயக்கங்களின் ஆட்சியில்தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வளர்ச்சி உள்ளதா? இரு பெரும் தலைவர்கள் நம் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் நான்கு மாதத்தில் நடத்தியே ஆக வேண்டும். தற்போது மதுரையில் ரவுடியிசம் பெருகி வருகிறது. வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் நம்மை மறக்கவில்லை. அவர்களிடத்தில் நமக்கு கெட்ட பெயர் இல்லை. உள்ளாட்சியில் மதுரையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும். பொய்யான 505 வாக்குறுதிகளை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துள்ளனர். திமுகவை நம்பி மக்கள் இனி வாக்களிக்கப் போவது இல்லை. அதிமுகவுக்கு வாக்களிக்கவே மக்கள் நினைக்கிறார்கள். ஆளுங்கட்சி அத்துமீறலை முறியடிக்கும் சக்தி அதிமுகவிடம்தான் உள்ளது.” என்று கலகலப்பாகப் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.