`வராண்டாவில் வகுப்பறை'; சமுதாயக் கூடத்தில் அரசு கலைக் கல்லூரி; அடிப்படை வசதி கேட்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் சமுதாயக் கூடத்தில் , கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. பி.ஏ.,பி.காம்., பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.

சமுதாயக் கூடத்தில் அரசு கலைக்கல்லூரி

இருபாலரும் பயிலும் இந்தக் கல்லூரி அவசர கதியில் தொடங்கப்பட்டதால் கடந்தாண்டு வெறும் 60 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்றனர்.  இந்தாண்டு புதிதாக 210 மாணவ, மாணவிகள் இதுவரை சேர்ந்துள்ள நிலையில் கடந்தாண்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 270 பேர் பயின்று வருகின்றனர். ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ள நிலையில் சமுதாயக் கூடத்திலுள்ள  வராண்டாவையும் அடைத்து அங்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மாணவ, மாணவிகளுக்கு இட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, காலை மற்றும் மாலை என்று இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது. இருப்பினும் இட நெருக்கடியால்  போதிய  கல்வி வசதி அளிக்க முடியாத சூழல் உள்ளது. முறையான வகுப்பறைகள், அறிவியல் பயிற்சிக்கூடம், நூலகம், விளையாட்டு அரங்கம் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் கல்லூரி பெயரளவிற்கு  இயங்கிவருகிறது. இங்கு ‘நாங்கள் எப்படி கல்விக் கற்க முடியும்?’ என மாணவர்கள் குமுறுகின்றனர்.

Also Read: நாகை கொள்ளிடம் ஆற்றின் அருகே கொட்டப்படும் குப்பை குவியல்! – மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் கோரிக்கை

சமுதாயக் கூடத்தில் அரசு கலைக்கல்லூரி

கல்லூரிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டித்தர தாமதம் ஏற்பட்டாலும், தற்போது உடனடியாக வாடகை கட்டடத்தில் இயங்கவாவது அரசு நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் குணசேகரனிடம் பேசினோம்.

“கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இடம் கேட்டு, நானும் தாசில்தாரும் நேற்று திருவாவடுதுறை ஆதீனத்தைச் சந்தித்துப் பேசினோம். யோசித்து சொல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையில் தற்காலிகமாக வாடகைக்கு கட்டடம் தேடிக்கொண்டிருக்கிறோம். சில திருமண மண்டபங்களையும் பார்த்திருக்கிறோம். விரைவில் இடமாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.