சாட்டை துரைமுருகன் கைது திமுக அரசை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தவித அனுமதியும் பெறாமல், மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த கூடத்தில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசியதோடு இல்லாமல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால், இன்று அதிகாலை சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்ததைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலக தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் பெயரில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதை கண்டித்து நேற்று (அக்டோபர் 10) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

ALSO READ |  வன்முறைப் பேச்சு: நாம் தமிழர் ஆதரவாளர் துரைமுருகன் கைது

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் போக்கோடு பொய்யாக குற்றஞ்சாட்டி வழக்கு புனைந்து சிறைப்படுத்தி இருக்கும், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. 

சாட்டை துரைமுருகன் தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி அவரை கைவிட்டது போல கட்சியின் கடிதத்தை போலியாக உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியல் ஆகும். 

இத்தருணத்தில் அவர் இவ்வழக்கில் இருந்து மீண்டு வரவும் சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவருடைய முழுமையாகத் துணை நிற்கும் என தெரியப்படுத்துகிறோம் 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | சமூகநீதி என்றால் என்ன? முதல்வர் விளக்கனும் – சீமான்

நேற்று யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசியது:
பிரபாகரன் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் தெரியும். ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்கிறதா? என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். இக்கருத்துகள் சமூக அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்.பி. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் புகார் அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது

காலையில் சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாக பேசிய நபரை தாக்கிய சம்பவத்தில் கைது ஆகியிருந்தார் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.