தமிழகத்துக்கு உரிய 40 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு

புதுடெல்லி: இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் நீர் பங்கீடு, நீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என கர்நாடகவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம் வரை 25.84 டிஎம்சி நீரையும், அக்டோபர் மாதத்திற்கான 14 டிஎம்சி நீரையும் வழங்க வேண்டும் என கர்நாடகா மாநிலத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும்  பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ALSO READ |  தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகம் சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள 26 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அத்துடன் அக்டோபர் மாதத்திற்கான 20 டி.எம்.சி. தண்ணீரில் இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட படி, தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு இன்னும் வழங்கவில்லை. ஆகவே தற்போது வரை நிலுவையில் உள்ள 40 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய நீரை வழங்க வேண்டும் என கர்நாடகவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ |  தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா: தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.