லஞ்சம் பெறும் முறைகேட்டை தடுக்க தனிக்குழு; அரக ஞானேந்திரா| Dinamalar

உடுப்பி : ”கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகளை நியமிக்கும் போது, லஞ்சம் பெறும் முறைகேட்டை தடுக்க தனிக்குழு அமைத்து இடைத்தரகர்கள் கண்காணிக்கப்படுவர்,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.உடுப்பியில் கட்டப்பட்ட புதிய போலீஸ் குடியிருப்பை அமைச்சர் அரக ஞானேந்திரா, நேற்று திறந்து வைத்தார்.

அவர் பேசியதாவது:எனக்கு வனம் அல்லது வருவாய் துறை கிடைக்குமென, எதிர்ப்பார்த்தேன். ஆனால் உள்துறை கிடைத்தது. இதற்கு முன் பல முறை, மக்களுக்காக நடந்த போராட்டங்களில் நான் பங்கேற்றேன்.அப்போது நடந்த சம்பவங்கள் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. போலீசார் தடியடி நடத்தினர். அப்போது என் முதுகெலும்பு முறிந்தது.

இப்போது காலம் மாறி, அதே போலீசார் எனக்கு, ‘சல்யூட்’ அடிக்கின்றனர். இது தான் ஜனநாயகத்தின் அழகு.குற்றங்களை கட்டுப்படுத்த, போலீசார் கடுமையாக முயற்சிக்கின்றனர். குற்றம் நடந்த இடத்துக்கு, தடயவியல் ஆய்வக வல்லுனர்களும், போலீசாருடன் சென்று, சாட்சிகளை சேகரிப்பர்.இது, நாட்டிலேயே முதல் முறையாகும். இதற்காக 200க்கும் மேற்பட்ட ஆய்வக வல்லுனர்கள் நியமிக்கப்படுவர்.

நடப்பாண்டு இறுதிக்குள், 100 புதிய போலீஸ் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025க்குள், 10 ஆயிரம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்படும்.மாநிலத்தில் 113 போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை. எனவே 100 போலீஸ் நிலையங்கள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகளை நியமிக்கும் போது சில இடைத்தரகர்கள் லஞ்சம் பெறுவதாக, என்னிடம் புகார் வந்துள்ளது.ஒரு நபரின் மீது புகார் பதிவாகியுள்ளது. இது போன்ற முறைகேட்டை தடுக்க தனிக்குழு அமைத்து இடைத்தரகர்கள் கண்காணிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.